தமிழ்நாடு

"புதுச்சேரியில் 89.87% அதிகரித்த வாக்கு சதவீதம்" - விஜய்யும், சமூகவலைத்தளமும்தான் காரணமா?

புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 89.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், வரலாற்றிலேயே அதிகப்படியான மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

Vinvizhi Leninton

புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 89.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், வரலாற்றிலேயே அதிகப்படியான மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். மேலும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வரலாற்றில் முதல் முறையாக அதிகப்படியான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்பு, அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை 2011ல் பதிவாகியிருந்தது. அப்போது 85.57% வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகப்படியான மக்கள் வாக்குகளை செலுத்த காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 30 தொகுதிகளில் உள்ள 294 வேட்பாளர்கள் தேர்தல் களத்தை சந்தித்தனர். இந்த முறை மொத்தமாக ஏறத்தாழ 9.44 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதிலும், இந்த முறை அதிகப்படியான மக்கள் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

சமூக வலைதளத்தின் பங்கு: கடந்த தேர்தல்களை விட சமூகவலைத்தளத்தில் பங்கு இந்த முறை மிக முக்கிய பங்காற்றியுள்ளது. பலரும் சமூக வலைதளத்தின் வாயிலாக தங்களது அரசியல் நிலைப்பாடு மற்றும் மற்ற அரசியல் கட்சியின் நிலைப்பாடு, அதன் தலைவர்கள் மீது விமர்சனங்களை அல்லது ஆதரவுகளின் மூலம் இளைஞர்கள் தங்களது நிலைப்பாட்டினை முன்வைத்து வருகின்றனர். இதன் மூலம் இந்த முறை அரசியலில் முதல் வாக்காளர்களும், அரசியலில் இருந்து தள்ளி இருந்த இளைஞர்களும் ஆர்வமாக பங்கேற்றனர். இதனால் அவர்களின் வாக்குகளும் இந்த முறை தவறாது பதிந்திருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் கூட முதல் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி, அதன் மூலம் அவர்களை இலகுவாக சென்றடைந்தனர். இளைஞர்களும் அரசியல் சித்தாந்தம் மற்றும் அரசியல் விமர்சனம் போன்றவற்றை சமூகவலைத்தளத்தில் வாயிலாக தெரிவிக்கத் தொடங்கினர். பொதுவெளியில், அரசியல் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இது போன்ற விஷயங்களால், புதுச்சேரியில் வாக்குகளின் சதவீதம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

அரசியல் கட்சிகள்: புதுச்சேரியில், அனைத்திந்திய தேசிய காங்கிரஸ் (AINRC) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, விசிக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா அணியும் இப்போட்டியில் உள்ள இரண்டு பிரதான கூட்டணிகளாகும். இந்நிலையில், நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய் தலைமையிலான தவெகவின் நுழைவு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சி (NTK), தமக்கென ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் களத்தில் உள்ள மற்றொரு கட்சியாகும்.

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நுழைவு என்பது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இளைஞர்களை அரசியலில் நுழைய செய்ததில், விஜயின் வருகையும் பெரும்பங்கு வகித்தது. இவரது அரசியல் நுழைவிற்கு பின்னர் அரசியல் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கியது. திமுகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார மேடைகளில் பேசிவந்தார். இவருக்கென்று கூடும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தவெக என்ற அரசியல் கட்சிக்கும் இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் இருந்து வருகிறது. தவெகவிற்கு ஆதரவாக பல இளைஞர்களும் பொதுவெளியில், சமூகவலைத்தளத்தில் அரசியல் பேசி வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய பல இளைஞர்களும் முனைப்பாக இருந்துவருகின்றனர். இதுவும் கூட புதுச்சேரியில் அதிக சதவீதத்தில் வாக்குகள் பதிவாக ஒரு காரணமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இதனை தவிர்த்து, இந்த முறை தேர்தல் களம் என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த முறை வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும்? என்பதே பலராலும் யூகிக்க முடியாததாக இருக்கிறது. தன்னால் மக்கள் கருத்தியல் ரீதியாக தாங்கள் விரும்பாத கட்சிகள் வந்துவிட கூடாது என்பதால் வாக்களிக்க வந்திருக்கக்கூடும். இந்த முறை எதிர் வாக்காளர்களும் தங்களது வாக்குகளை செலுத்த முன்வந்துள்ளனர். இதுவும் வாகு சதவீதம் அதிகரிக்க ஒரு காரணம்.

புதுச்சேரியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளனர். மேலும், இந்த முறை வாக்குகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்ததில் இளைஞர்களின் பங்கு என்பது மிக முக்கிய பங்காற்றியது. புதுச்சேரியில் நடந்ததை போன்று தமிழ்நாட்டிலும் மக்கள் இந்த முறை வாக்களிக்க ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் வருவார்களா? என்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகவே உள்ளது. தமிழகத்திலும் புதிய அரசியல் கட்சிகளின் வருகை மற்றும் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகமாக இருப்பதால் புதுச்சேரி போன்று தமிழகத்திலும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.