2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த வண்ணம் உள்ளது. கட்சி தலைவர்கள் பலரும், தங்களது வாக்குறுதிகளை பிரச்சாரத்தில் அறிவித்த வண்ணமே உள்ளனர். பல அரசியல் தலைவர்களும் இலவசங்களை அறிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, திமுக, அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் இலவசங்களை அறிவித்து உள்ளனர். ஆனால் அதற்கான பணம் எவ்வளவு செலவாகும்?, தமிழ்நாட்டின் கடன் சுமை எவ்வளவு? என்பது பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
கட்சிகளின் இலவச அறிவிப்புகள்: மக்களின் நலனுக்காகவும், பெண்களின் நலனுக்காகவும் பல இலவசங்களை திமுக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக 1000 ரூபாய் 'மகளிர் உரிமை தொகை' வழங்கிய திமுக அரசு, தற்போது, 2000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும், 8000 ரூபாய் 'கூப்பன்' குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், குடும்ப தலைவிகள் தங்களுக்கு வேண்டிய வீட்டு உபயோக பொருளை தாங்களே விரும்பியவண்ணம் வாங்கிகொள்ள முடியும் என்று திமுக சார்பில் கூறுகிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு இலவச லப்டப், வயதானவர்களுக்கு மாதம் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் 2000 ரூபாய் 'பென்ஷன்' வழங்கப்படும் என்றும், பெண்களுக்கான விடியல் பேருந்து, பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உதவித்தொகை, ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறி பல இலவசங்களை அறிவித்துள்ளனர். மேலும், கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள சுமார் 5 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு தகுதி அடிப்படையில் தேவைக்கேற்ப, அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500ல் இருந்து, ரூ.2,500ஆக உயர்த்தப்படும் என்றும், திமுக அரசு கூறியிருக்கிறது.
அதிமுக கட்சி சார்பில், வரிசுமை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மகளிர்காக 'குலவிளக்கு' திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் அளிக்கப்படும் என்றும், மகளிரைப்போல ஆண்களுக்கும் விலையில்லா பேருந்து வசதி, விதவை பெண்கள், முதிர்கன்னிகள், முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவிப்பணம் 12,000ல் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாயும், 12ம் வகுப்பு படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போருக்கு மாதம் ரூ. 1000ம் வழங்கப்படும் என்றும், பொங்கலுக்கு, பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என்றும், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா குளிர்சாதன பெட்டியும் வழங்கப்படும் என்று அதிமுக கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
தவெக சார்பில், மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், அன்னப்பூரணி திட்டம் மூலம் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், அண்ணன் சீர் திட்டத்தின் மூலம், 1 பவுன் தங்கமும், பட்டு புடவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும், பணம் காரணமாக பள்ளியில் இடைநிற்றலை குறைக்க வருடத்திற்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு வெற்றிப்பயணம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்ய இலவசம் என்றும், தமிழ்நாட்டில் பிறகும் ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்தவுடன் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் குழந்தைக்கு தங்க மோதிரமும், பிறந்த குழந்தைக்கு தேவையான பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்றும், வேலைக்காக காத்திருக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாயும், டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்றும், தவெக சார்பில் இலவசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசங்கள் சாத்தியமா?: இந்த மூன்று முக்கிய கட்சிகளும் மக்களின் நலனுக்காக பல இலவசங்களை அறிவித்துள்ளனர். இது எப்படி சத்தியம்? என்பது முதல் கேள்வி. குறிப்பாக தமிழ்நாடு அரசின் கடன் தொகை, 2026-27 நிதியாண்டில் 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று பிப்ரவரி 17 அன்று சமர்ப்பிக்கப்பட்ட திமுக அரசின் இடைக்கால பட்ஜட் தாக்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். மேலும் நடப்பாண்டு பட்ஜட்டில் வருவாய் 2.21 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது 2.07 கோடியாக வருவாய் குறைந்துள்ளது. மேலும், நடப்பாண்டு பட்ஜெட்டில் 3 லட்சத்து 73,204 கோடியாக இருந்த மொத்த வருவாய் செலவினங்கள், திருந்த மதிப்பீட்டில் 3 லட்சத்து 78, 917 ஆக உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் செலவினங்களாக 3.93 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டு 9 லட்சத்து 29,959 கோடியாக மாநிலத்தின் கடன் திருத்த மதிப்பீட்டில் 9 லட்சத்து 52,374 கோடியாக உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மீது தற்போது இருக்கும் கடனாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 28,960,838 வாக்களிக்கும் பெண்கள் உள்ளனர். 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இவர்களுக்கு வழங்க ஆகும் செலவு என்பது, 23,168 கோடிகளாக இருக்கும். மேலும், இவர்களுக்கு வழங்கப்படும் இந்த 2000 ரூபாயின் செலவானது தோராயமாக 5,792 கோடியாக இருக்கும். அதிமுகவின் வாக்குறுதியில் உள்ளதுபோல், ஆண்களுக்கும் இலவச பேருந்து பெண்களுக்கும் இலவச பேருந்து என்று எடுத்துக்கொண்டால், உயர்ந்து வரும் எரிபொருள் விலையை எப்படி அரசு கையாளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. இதற்காக இவர்கள் எவ்வளவு நிதி ஒதுக்குவர்? என்பதும் கடனாக எவ்வளவு அதிகரிக்கும்? என்பதும் சிந்திக்கவேண்டிய ஒன்று. இதையும் தாண்டி இலவச குளிர்சாதன பெட்டிகள் வழங்குவதாக அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பது என்பது, இது சத்தியம் தானா? என்ற கேள்வியை எழ வைக்கிறது. அதாவது, இலவசமாக வழங்கப்படும் மின்சாதன பொருட்களை ஏதோ ஒரு நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொள்வர். ஆனால் அனைவர்க்கும் தரமான, நன்கு வேலை செய்யக்கூடிய மின்சாதன பொருள்தான் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இதைவைத்து ஊழல் பெருமளவில் நடக்கும். அதேபோல் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளதுபோல், அண்ணன் சீர், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் போன்றவை தங்கத்தை சார்ந்து உள்ளது. அண்ணன் சீரில் 1 பவுன் தங்கம், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் மோதிரம் போன்றவை இலவசமாக வழங்குவது சாத்தியம் தானா? என்ற கேள்வியை எழுப்புகிறது. போரின் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. மேலும்,கணிக்கமுடியாத விலையாக இருக்கும் தங்கத்திற்காக, இந்த கட்சியினர் எவ்வளவு லட்சம் கோடிகளை செலவழிப்பார்?. மேலும் இதனால் கடன் சுமை பலமடங்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்த திட்டங்களுக்காக இவர் செலவழிக்க போவது பெரும் தொகையாகவே இருக்கும். அதாவது, 23,168 கோடிகளையும் தாண்டி செல்லும். வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தராமல் அவர்களுக்கு மாதம்தோறும் 4000 ரூபாய் தருவதாக கூறியிருப்பது வளர்ச்சிக்கான பாதையாக அமையுமா? என்பது கேள்விக்குறியே. தமிழ்நாட்டில் 3.5% இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். அதாவது 8 கோடி பேரில், 30 லட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். இவர்களுக்கு மாதம், 4000 ரூபாய் என்று வைத்தால் அதன் மதிப்பு என்பது எங்கோ செல்கிறது.
தமிழ்நாடு ஏற்கனவே பல லட்சம் ரூபாய் கடனில் உள்ளது. அந்த வகையில் தற்போது கொடுக்கப்படும் இலவசங்கள் என்பது, அந்த கடனை மேலும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர்த்து குறைக்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாக, இந்த இலவசங்கள் என்பது தேவை இருப்போருக்கு சென்றைக்கிறதா? என்று கேட்டால் கேள்விக்குறிதான். பல ஏழை பெண்கள் இன்று வரை அரசின் மகளிர் உரிமைத்தொகையை பெறமுடியாமல்தான் இருக்கிறார்கள். குக்கிராமங்களில் இதுபோன்ற இலவசங்கள் சென்றடைவது சிரமமாகவே உள்ளது. வசதி இல்லாத மக்களும் குறைந்த பட்சம் இந்த இலவசங்கள் மூலமாவது முன்னேறி வரவேண்டும் என்ற அரசின் வாதத்தில் இருந்து பார்த்தால், பணம் இல்லாத மக்கள் இலவசங்களை வாங்கவே பணம் கொடுக்கவேண்டியுள்ளது. இந்த இலவசங்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை சென்றடையவேண்டும் என்ற அரசின் முயற்சியும் இதனால் வீணாகிறது. இந்த இலவசங்களுக்காக அரசு வாங்கும் கடனை அடைக்க வட்டி கட்டவேண்டும். மேலும் 5 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும் போது, பழைய கடனையும் சேர்த்து அவர்கள் அடைக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இதுமட்டுமின்றி அவர்கள் அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மற்றும் இலவசங்களுக்காக வாங்கும் கடன் தொகையும் அதிகரிக்கும். ஆகவே மக்களை கவர்வதற்கென்ற இந்த இலவசங்கள் தேர்தல் சமயங்களில் 'பளபளப்பாக' காட்டப்பட்டாலும் உண்மையில் அது உரிய மக்களை சென்றடைவதில்லை, மாறாக அது மாநில அரசின் கடன்தொகையையே அதிகரிக்கிறது என்பதே கசப்பான உண்மை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.