கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நீட் (NEET UG 2026) தேர்வு, கேள்வித்தாள் கசிவு காரணமாகத் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த மாபெரும் முறைகேட்டின் பின்னணியில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரைச் சேர்ந்த 30 வயது மாணவன் ஒருவன் மூளையாகச் செயல்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) இந்தத் தேர்வை ரத்து செய்ததைத் தொடர்ந்து, சிபிஐ (CBI) அதிகாரிகள் நடத்திய அதிரடி வேட்டையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாசிக் நகரின் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான சுபம் கைர்னார் என்பவர், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பி.ஏ.எம்.எஸ் (BAMS) எனப்படும் ஆயுர்வேத மருத்துவப் படிப்பு படித்து வரும் மாணவர் ஆவார். முதற்கட்ட விசாரணையில், புனேவைச் சேர்ந்த ஒரு மர்ம நபரிடமிருந்து நீட் தேர்வு கேள்வித்தாளை சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு சுபம் வாங்கியது தெரியவந்தது. பின்னர் அந்தத் தாளை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கு விற்று, ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் லாபம் பார்த்ததும் உறுதியாகியுள்ளது.
இந்தக் கேள்வித்தாள் கசிவு என்பது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு கிரிமினல் வேலையாக இருந்துள்ளது. சுபம் வாங்கிய அந்தக் கேள்வித்தாள், என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் ஆப் மற்றும் டெலிகிராம் குரூப்கள் மூலம் காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் தொடங்கிய இந்தக் கசிவு, ஹரியானா, ராஜஸ்தான் (ஜெய்ப்பூர், சீக்கர்), ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் கேரளா எனப் பல மாநிலங்களுக்கும் பரவி ஒட்டுமொத்தத் தேர்வு முறையையே சீர்குலைத்துள்ளது. போர்ட்டபிள் ஸ்கேனர்கள் மற்றும் ஷேடோ சர்வர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை இதற்காக அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
சிபிஐ அதிகாரிகள் தன்னை நெருங்குவதை அறிந்த சுபம், போலீசாரிடம் இருந்து தப்பிக்கத் தனது அடையாளத்தை முழுவதுமாக மாற்றியுள்ளார். தலைமுடியை ஒட்ட வெட்டி தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் பழைய புகைப்படங்களை வைத்து அதிகாரிகள் அவரைத் துல்லியமாக அடையாளம் கண்டு கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவர் ஒரு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கைது குறித்துப் பேசிய சுபமின் தந்தை மதுகர் கைர்னார், தனது மகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார். தனது மகனுக்கும் வினாத்தாள் கசிவு கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிடும் அவர், ஒருவேளை விசாரணையில் மகனின் பெயர் வந்திருந்தால் உண்மையை நிலைநாட்ட நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது சுபமிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், இந்தப் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைத் தேடி வருகின்றனர்.
நீட் தேர்வு போன்ற ஒரு முக்கியமான தேசிய அளவிலான தேர்வில், வெறும் 30 வயது மாணவன் ஒருவன் புகுந்து இவ்வளவு பெரிய முறைகேட்டைச் செய்தது ஒட்டுமொத்தக் கல்வித் துறையையுமே அதிர வைத்துள்ளது. 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களைப் பிடிக்க சிபிஐ தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும், 45 மணி நேரத்திற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து என்டிஏ அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்