அதிமுக முன்னாள் அமைச்சர் RB உதயகுமார், அதிமுகவில் இருந்து விலகி தனது MLA பதவியையும் ராஜினாமா செய்த விஜயபாஸ்கர் குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்த தவெக-விற்கு சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த விஜயபாஸ்கர், தான் கட்சியில் இருந்து விலக்குவதாகவும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும் அறிவித்திருந்தார். மேலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின.
அதன் எதிர் அலையாக அதிமுக முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் தற்போது ஒரு கண்டன வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “அடையாளம் கொடுத்து, அதிகாரம் கொடுத்து, முகவரி கொடுத்து, வாழ்வு கொடுத்து, தங்களை ஆளாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டிய இந்த சோதனையான நேரத்திலே கட்சி சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை தலைமை சரியில்லைன்னு அவதூறுகளை அள்ளி தெளித்துக் கொண்டே இருந்தால் தொண்டர்கள் இனியும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்? விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தான் தலைமைக்கு ஏற்படுத்தியிருக்கிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும் “கட்சிக்கு விஜயபாஸ்கர் வருவதற்கு முன்பாக தனக்கும், தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துபத்துகளையும் இப்போது விஜயபாஸ்கர் வைத்திருக்கும் சொத்து பத்துக்கள் முதலீடுகளை எல்லாம் அவர் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்கு போவாரா? என்று காட்டமான கேள்வியை முன்வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து, “இந்த கட்சியில் எல்லாம் ஆண்டு அனுபவிப்பீங்க சொத்து பத்துகளை சேர்த்து முதலீடு செய்வீர்கள், செல்வாக்கை சேர்ப்பீர்கள், எல்லாம் சேர்த்த பிறகு தலைமையும் விமர்சிப்பீர்கள். தொண்டர்களை கைவிட்டு, மக்களை கைவிட்டு, உங்கள் சுயநலத்திற்காக உங்கள் முதலீடைக் காப்பாற்ற, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியை காட்டிக் கொடுத்தால் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?” என்றும் “வயிறு எரிகிறது.. எம்ஜிஆர் வளர்த்த கட்சி, அம்மா வளர்த்த கட்சி, இன்றைக்கு சாமானியர் எடப்பாடியார் கட்சியை நடத்தி வருகிறார் தலைமை சரியில்லை என்று பதிவு போடுகிறீர்கள்” என்றும் விமர்சித்திருந்தார். “10 வருஷமா நீங்க அவர் காதை கடிச்சு, காலை பிடித்து எத்தனை எத்தனை விஷயங்களை நீங்க செய்தீர்கள், இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா? இப்படி நீங்க போயிட்டு இருக்கீங்க நாங்க வாய் மூடிட்டு மௌனமா வேலைக்கு பாத்துட்டு இருக்கணுமா? உண்மை தொண்டர்கள் எல்லாம் ஏமாளிகளா? விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது? என்றும் கடும் கோபத்துடன் கேள்விகளை அடுக்கியுள்ளார் உதயகுமார்.
நீங்கள் தான்தோன்றித்தனமாக செய்யலாமா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? அம்மா ஆன்மா, எம்ஜிஆர் ஆன்மா உங்களை சும்மா விடுமா? இப்போது உங்களுக்கு என்ன தைரியம் வந்துவிட்டது என்பது தெரியுமா? முன்பெல்லாம் கட்சியில் அதிகாரத்தை அணிவித்து விட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால் தொண்டர்கள் கொதித்து விளக்குமாறு, செருப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குள்ளே நுழைவு விடாமல் செருப்படி கொடுப்பார்கள், அதையெல்லாம் தற்போது நடக்கவில்லை தொண்டர்கள் செய்யவில்லை என்ற தைரியத்தில் நான் மாற்று கட்சிக்கு மாறுவதாக சொல்கிறார்கள். தலைமையை புகழ்ந்து பேசி விட்டு தொண்டர்களை ஏமாற்றிவிட்டு எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு கல்குவாரி எடுத்துவிட்டு எத்தனை கல்லூரி உங்களிடம் உள்ளது இது எல்லாம் உங்கள் தாத்தா போட்ட பிச்சையா?
“அம்மாவை ஏமாற்றி பதவி வாங்குவீர்கள் சொத்து சுகத்தை சேர்ப்பீர்கள், எடப்பாடியாரை ஏமாற்றுவீர்கள் சொத்து சுகத்தை சேர்ப்பீர்கள். கட்சிக்கு ஒரு தோல்வின்னு வந்துட்டா காப்பாற்ற வேண்டிய நேரத்துல கட்சியை காட்டி கொடுத்துட்டு ஓடுவீங்க தொண்டர்கள் இதை எல்லாம் கைகட்டி வாய் பொத்தி மௌனமா வேடிக்கை பார்க்கணுமா? தொண்டர்கள் கொதித்து எழுந்தால் நீங்கள் நாசமாகப் போய் விடுவர்கள். அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்கள்? நாய் மாதிரி கேட்டில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு எல்லாம் சூடு சொரணை இல்லையா? சோற்றுல உப்பு போட்டு தானே சாப்பிடுகிறீர்கள் பதவி இல்லன்னா என்ன? பத்து வருஷம் அமைச்சரா இல்லையா? ராணுவ வீரர்கள் எதிரியிடமிருந்து நாட்டை தங்களை காப்பாற்ற வெற்றி பெறுவார்கள் இல்லை என்றால் மரணம் அடைவார்கள் எதிரியிடம் சரணாகதி அடைய மாட்டார்கள். எதிரியிடம் சரணாகதி பெற்று.. உயிர் பிச்சை கேட்டு வாழ்கிற வாழ்வதை விட செத்து போவது மேல்” என்றும் கடுமையான வார்த்தைகளால் துளைத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து “54 வருடம் இந்த இயக்கத்தில் எந்த பதவியும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறானே தொண்டன் அவர்களை நம்பி தான் கட்சி இருக்கிறது தவிர உங்களைப் போல ஓடுகாலிகளை நம்பி இந்த கட்சி இல்லை” என்றும் “சொந்த கட்சியில் ஜெயித்தால்தான் அமைச்சராக முடியும் வேறு கட்சியில் அமைச்சரானால் மதிக்க மாட்டார்கள் தவெக நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பாக சேர்ந்து இருக்க வேண்டாமா? ஏன் தேர்தல் பின்பு தவெகவில் சேருகிறீர்கள்? விஜயை வாழ வைக்கப் போகிறீர்களா? எத்தனை பதவி சுகம் கொடுத்த கட்சியை தோற்றவுடன் காட்டிவிட்டு செல்கிறீர்கள் அதிமுகவிற்கு இந்த கதி என்றால் விஜய்க்கு என்ன கதி? தலைமை சரியில்ல என கருத்து சொல்லி நாடகமாடி கட்சி தொண்டர்களுடைய நலனையும், கட்சியின் எதிர்காலத்தையும் காவு கொடுத்து விட்டு தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமே முக்கியம் என்று கட்சி தாவுகிற நடவடிக்கை இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எச்சரிக்கையாக இதை சொல்கிறேன்” என்று விஜயபாகர் மீது குற்றச்சாட்டுகளையும் தனது பெரும் கோபங்களையும் சரமாரி கேள்விகளால் அடுக்கியிருந்தார் RB உதயகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்