பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சேலத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டமும் அதன்பிறகு பொதுக்குழு கூட்டமும் நடக்கிறது. செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கிறது.
2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியில் சேரும்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய 3 கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் நிறுவனர் ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் செயல்தலைவராக ராமதாஸின் மகள், ஸ்ரீ காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாமக கௌவரவத்தலைவராக ஜி.கே,மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய ஸ்ரீ காந்தி, “25 எம்.எல்.ஏ.க்களோடு பாமக சட்டமன்றத்திற்குள் நுழையும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்குபெற உறுதி ஏற்போம். அதிகாரம் வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். பாமக என்பது மருத்துவர் ராமதாஸ் கட்டிய கோட்டை. ராமதாஸ் இல்லாத பாமக பிணத்திற்கு சமம். நான் அவரது மகள் மட்டுமல்ல பாமகவின் தொண்டன். நமது செயல் வீரர் கி.கே மணியை கைக்கூலி எனக்கூறுபவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் -ன் கைக்கூலிகள். இனிமேல்தான் ராமதாஸின் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.