மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு 28 வயதில் வைரமுத்து என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் குமாரின் மகளான மாலினி என்பவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மாலினி தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். வைரமுத்துவின் வீட்டில் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் மாலினியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
எனவே காதல் விவகாரம் குறித்து ஊருக்குள் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் மாலினியை அவரது சகோதரர் அடித்ததாக சொல்லப்படுகிறது இதனால் வைரமுத்து மாலினியின் சகோதரரிடம் வாக்குவாதம் செய்து மாலினியை அடிக்கக் கூடாது என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாலினியின் தயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விசாரணையில் மாலினி “நான் வைரமுத்துவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மாலினியின் குடும்பத்தினர் தங்களுக்கு மாலினி வேண்டாம் என கூறியுள்ளனர். எனவே மாலினியை வைரமுத்துவின் குடும்பத்தினர் அழைத்து சென்று அவர்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வைரமுத்துவிற்கும் –மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைக்க வைரமுத்துவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். எனவே மாலினி நேற்று வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற வைரமுத்துவை வழி மறித்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் உயிருக்கு போராடிய வைரமுத்துவை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு வைரமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் மாலினியின் தாயார் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் வைரமுத்து தனது மகளை திருமணம் செய்வதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் வைரமுத்துவின் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று அவருக்குகொலைமிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வைரமுத்து -வின் உறவினர்கள் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என கூறி, கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கொலை வழக்கு சம்பந்தமாக கொலை செய்த 1. குகன் (21), குகனின் நண்பன் 2. அன்புநிதி (19) மற்றும் குகனின் சித்தப்பா 3. பாஸ்கர் (42) 4. மாலியின் தாய் விஜயா (45) பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கினை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டது இன்று காவல்துறையை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்புதான் ஐ.டி ஊழியர் கவின், சாதி மாறி காதலித்ததற்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன் சோகமே இன்னும் ஆறாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை நடந்துள்ள சம்பவம், தமிழகத்தின் சமூக நீதியையே கேள்விக்குறியாகி உள்ளது. பெரியாரின் 146 -ஆவது பிறந்த நாளை தமிழகமே கொண்டாடி வருகிறது. ஆனால் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சமூக அவலம் இன்னும் களைந்தபாடில்லை. இத்தனை ஆணவக்கொலைகளை ஒரு தேசம் எவ்வாறு பொறுத்துக்கொண்டு கள்ள மவுனம் சாதிக்கிறது என்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும். சாதி என்பது ஒரு மன நோய், அதை காலங்காலமாக காக்கும் பொறுப்பு பெண்களிடம் இருக்கிறது. அதற்கு மற்றொரு சாட்சிதான் வைரமுத்து -வின் படுகொலை சம்பவம். இந்தியாவின் சாதிய கட்டமைப்பினை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வேலையை பெண்கள் தான் செய்கின்றனர். இத பொறுப்பு பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதான், இருப்பினும் எந்த காரணத்தை முன்னிறுத்தியும் பாலினத்தை வைத்தும், பிறப்பின் பெயரால் ஒரு உயிரை கொல்லும் செயலை ஒருபோது ஏற்க இயலாது.
ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என எவிடன்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அரசு இதற்கு மேலாவது இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், பாகுபாடில்லாமல் கிடைக்கக்கூடிய நீதியே “சமூக நீதி” ..!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.