தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “தாராபுரம் தொகுதியில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் ஏன் வந்தது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை குறுகிய காலத்திலேயே விட்டு விலகியதால் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது.
ஒரு இடைத்தேர்தலுக்கு பல கோடி ரூபாய் அரசு பணம் செலவாகிறது. மக்கள் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வது சரியா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இதுபோன்ற தேவையற்ற தேர்தல் மீண்டும் நடைபெறாத வகையில் மக்களே தங்களது வாக்கின் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. இவற்றுக்கு உரிய தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், தேவையற்ற தேர்தல் செலவுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த பணம் உலகத்தரம் வாய்ந்த கல்வி, சிறந்த மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்ப வேண்டும்.
2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், மக்களை விட்டு நாங்கள் விலகவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கிறோம். வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாக நாங்கள் கருதும் இந்த இடைத்தேர்தலை, அரசியல் மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணம் கொடுக்காமல், மக்களின் நம்பிக்கையை மட்டும் கொண்டு இந்த தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம்.
தாராபுரம் மக்கள் தங்களது வாக்கின் மூலம் இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போட்டியிடும் எனது தங்கை கார்த்திகாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். புரட்சி எப்போதும் வெல்லும். நமது இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை, தமிழர்களின் ஒற்றுமை” என்று சீமான் பேசினார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனை குறித்து பேசிய சீமான், "மின்கட்டணம் உயர்ந்துருச்சு சொத்து வரி உயர்ந்துருச்சு. ஒரு முன்னறிவிப்பும் இல்ல திடீர்னு 600 கட்டிக்கிட்டு இருந்தவன் 6000 கட்டுறான் 300 கட்டனவன் 3000 கட்டறான். ஆனால் மின்சாரம் இருக்கிறதா என்றால்.. இல்ல. மின் தட்டுப்பாடு 'மின்தடைன்னு" சொல்லக்கூடாதுங்கிறாப்பல மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் மின்தடைல்லாம் சொல்லக்கூடாதுங்க மின் பற்றாக்குறைன்னு சொல்லணுமாம். "பெரிய இலக்கியவாதி" திருத்துறாப்பல கரண்ட் கட்டு கரண்ட் கட்டுதான். மின்தடை ஏற்படுது அப்படின்னா பஞ்சாப்பை பாருங்க 14 மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கு கரண்ட் இல்லாம இருக்கு என்கிறார். நாங்க பஞ்சாப்காரனுக்கு ஓட்டு போடலையே.. நீங்க இந்த மாநிலத்தில் மின்துறை அமைச்சர் தானே" என்றும் கட்டமாக பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்