``காலை எழுந்ததும் திரைப்படம்?" சீமான் - தயாரிப்பாளர் சங்கம் விவாதம்.. திமுக சொன்ன காரணம்! மறுபரீசலனை செய்யுமா அரசு? 
தமிழ்நாடு

``காலை எழுந்ததும் திரைப்படம்?" சீமான் - தயாரிப்பாளர் சங்கம் விவாதம்.. திமுக சொன்ன காரணம்! மறுபரீசலனை செய்யுமா அரசு?

சீமானுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் T. சிவா, பொருளாளர் G. தனஞ்ஜெயன் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.

Antony Ajay R

புதிதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் முதல் நாள் முதல் ஒருவாரத்துக்கு நாளொன்றுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதியாளித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம் அரசு.

இதன்படி காலை 6 மணிமுதல் நள்ளிரவு 2:30 மணி வரை திரையரங்குகள் படங்களைத் திரையிடலாம். தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து வைத்த கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சீமான்

அவரது அறிக்கையில், "தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது?" என்றும் கேள்விகளை முன்வைத்தார்.

அத்துடன், "ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?" என்றும் "தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?" என்றும் கேள்விகளை அடுக்கினார்.

சீமானுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் T. சிவா, பொருளாளர் G. தனஞ்ஜெயன் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.

அதில், "மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன.

அமைச்சர் ராஜ் மோகனுடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

அதற்குள் தவறான விமர்சனங்களும், படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, இங்கு திரைப்படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்னைகளை தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.

அதற்கு தீர்வாகதான் அதிகாலை 6 மணிக்கு சிறப்புக்காட்சி அனுமதி தரப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி படுத்திய சீமான் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில், "சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.

பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்ற கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை.

அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம். திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்

காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்துச் சொல்லாமல் மௌனமாகிறேன். தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!" என விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம், தயாரிப்பாளர் சங்க கோரிக்கையை மறுத்து இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தது.

அவர்களது அறிக்கையில், "இளைஞர் சமுதாயத்தையும், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் சீரழிக்கும் நோக்கில் பொழுது விடிந்தவுடன் புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடலாம் என்று தவெக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பேரதிர்ச்சியளிக்கிறது...

“7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு” லியோ படத் தரப்பினர் மாண்பமை உயர்நீதிமன்றத்திற்கு சென்ற போது கூட பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதையே உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆகவேதான் 6 மணி அல்லது 7 மணிக் காட்சியோ, ஒரு நாளைக்கு 6 காட்சிகளோ அனுமதிக்க முடியாது என்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருந்தது.

ஹைதராபாத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நிகழ்வு. 2023-ல் ஒரு திரைப்பட ரிலீஸின் போது சென்னை திரையரங்கம் அருகே, நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சியைக் கொண்டாட வந்த ரசிகர் லாரியின் மீது ஏறி நடனமாடி கீழே விழுந்து உயிரிழந்தார். இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால் இப்போது விஜய் அரசு 6 காட்சிகள் அனுமதித்தித்து அதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது...

புதுப்படம் வெளியாகும் போது மற்ற மாநிலங்களில் காலை ஆறு மணிக்கு காட்சிகள் திரையிடுவதால் தமிழ்நாட்டில் முன்கூட்டியே திரை விமர்சனம் வெளியாகி, படத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது என்கிற நோக்கத்தில் தமிழ்நாடு நடப்பு சினிமா தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருக்கிறது. மனித உயிர்களை விட எந்த வகையிலும் திரைப்படத்தின் வெற்றி உயர்ந்ததில்லை." எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அரசு தனது முடிவை திரும்பப் பெறுமா அல்லது அறிவிப்பில் மாற்றங்கள் கொண்டுவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்