Sengottaiyan  
தமிழ்நாடு

தவெக - காங்கிரஸ் கூட்டணி உறுதியா? - செங்கோட்டையன் பதில்..!

இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் மீனவர் பிரச்சனை போன்ற விவகாரங்களில் தவெக-வின் நிலைப்பாட்டை ...

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் தனது பாடல் வெளியீட்டு விழாவிற்காக மலேசியா சென்றிருந்தது தொடர்பாகப் பேசிய செங்கோட்டையன், பொதுவாக உலக நாடுகளின் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'ரோட் ஷோ' (Road Show) நடத்தும் அனுமதி, மலேசியாவில் முதல்முறையாக ஒரு கட்சித் தலைவரான விஜய்க்கு வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக அமைந்திருந்தது என்றும், அவர் ஒரு 'வரலாற்று நாயகனாக' உலக அரங்கில் பவனி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் எதிர்காலத்தை ஆளுவதற்கு விஜய்யின் தலைமை தேவை என்ற எண்ணம் மக்களிடையே வலுப்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களும், பெண்களும் விஜய்க்கு ஆதரவாக ஒருமனதாகக் குரல் கொடுத்து வருவதை நாம் காண முடிகிறது. 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்த்த போதும், 1988-ல் புரட்சித் தலைவி ஜெயலலிதாவைக் கண்ட போதும் மக்களிடையே இருந்த அதே எழுச்சியும் மாற்றமும் இப்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது என அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

கூட்டணி குறித்துப் பேசுகையில், விஜய்யைத் தமிழகத்தின் முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைய முடியும் என்பதைத் மிகத் தெளிவாகத் தெரிவித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக-வில் இணைய விரும்புவதாகக் கூறப்படும் கருத்துகள் இன்னும் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், ஜனவரி முதல் வாரத்திற்குள் முக்கியமான தலைவர்கள் இணைவது குறித்துப் பல புதிய செய்திகள் வெளிவரும் என்றும் அவர் எதிர்பார்ப்பு ஏற்படுத்தினார்.

விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், ஒரு புதிய இயக்கம் தொடங்கப்படும் போது மக்களின் கோரிக்கைகளை ஆய்ந்து முடிவெடுக்கக் கால அவகாசம் தேவைப்படும் என்றார். இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் மீனவர் பிரச்சனை போன்ற விவகாரங்களில் தவெக-வின் நிலைப்பாட்டை ஆய்ந்து அதற்கேற்பப் பணிகள் மேற்கொள்ளப்படும். திருமாவளவன் உள்ளிட்ட மாற்றுக் கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் விஜய் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகக் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.