தமிழ்நாடு

காவிரி குடிநீரில் சாக்கடை கலக்கிறது... காங்கேயம் பகுதியில் அவல நிலை....!

Malaimurasu Seithigal TV

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 13வது வார்டு பகுதியான கணபதி நகரில் நள்ளிரவு நேரங்களில்  காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், பல முறை புகாரளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  மக்கள் புகார் அளித்தனர். 

காங்கேயம் நகராட்சி ஆனது 18 வார்டு பகுதியில் உள்ளடக்கியது. இதில் 13வது வார்டு பகுதி  கணபதி நகரில் நள்ளிரவில் காவிரி கூட்டு குடிநீர்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அந்தக் குடிதண்ணீர் துர்நாற்றம் வீசியதிடம் கலங்கிய நீர் போல் இருந்துள்ளது. மேலும் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இதே போல் குடிநீர் சாக்கடை நீர் கலந்தும் துர்நாற்றம் வீசியம் வந்துள்ளது. 

காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நகராட்சி  அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி இன்று மாலைக்குள் சரி செய்து விடுவதாக உறுதி அளித்தனர். மேலும் கடந்த மாதத்தில் இதே போல் இந்த பகுதியில் குடிநீரில்  சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினர்.

மேலும் இன்று மாலைக்குள் சரி செய்யவில்லை என்றால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட 
இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு மாதமாக சாக்கடை நீர் கலந்துவருவதால் காசு கொடுத்து டிராக்டர் தண்ணீர் வாங்கவேண்டிய  சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் கவலை கொள்கின்றனர்.

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் வழங்கப்படுகின்றது.  மாதம் ஒருமுறை வழங்கப்படும் தண்ணீருக்கு ரூபாய் 151 வசூல் செய்கின்றனர். அப்படி வசூல்  செய்தும்  காவிரி நீர் வழங்காமல் சாக்கடை நீரை வழங்கும் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் எனக்  கோரிக்கை விடுக்கின்றனர். 

மேலும் காங்கேயம் நகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலைகளில் குழி தோண்டி வைத்த வண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.