தமிழ்நாடு

“பதவி வாங்கி தருவதாக ஆசைகாட்டி பாலியல் தொல்லை?” - ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன்.. பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

"ஆலோசனைக் கூட்டம் எனக் கூறி தன்னை அழைத்ததாகவும், கூட்டம் முடிய இரவு நேரமானபோது, தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக.."

Muthu Lakshmi

கோவை அருகே தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகியே பாலியல் சீண்டல் மற்றும் சாதிய ரீதியில் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்திருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், காளம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் சௌமியா. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தவெக-வில் தீவிரமாக பணியாற்றி வரும் இவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் எனக் கூறி தன்னை அழைத்ததாகவும், கூட்டம் முடிய இரவு நேரமானபோது தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் இச்சைக்கு தான் உடன்படாததால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியும், கட்சியை விட்டு வெளியேற்றவும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், சமீபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சௌமியா பற்கேற்கமால் தவிர்த்துள்ளார். அவர் பங்கேற்காது குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த தவெக மகளிர் அணி நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர், சௌமியா வீட்டிற்கே சென்று கதவைத் தட்டி, சாதிப் பெயரைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதற்கான வீடியோ ஆதாரங்களும், தன்னை விபத்து ஏற்படுத்திக் கொலை செய்ய ஒன்றிய செயலாளர் திட்டமிட்டதாக கூறப்படும் வாட்ஸ்-அப் ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக புகார் அளித்த சௌமியா தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இந்தப் பிரச்சனையை மூடி மறைக்கக் கோரி, ஒன்றிய செயலாளருக்கு நெருக்கமான சரவணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு, பண உதவி மற்றும் பதவி தருவதாகக் கூறி ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் தான் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது தவெக, ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகியே பாலியல் மற்றும் சாதி வன்கொடுமை புகார் அளித்திருப்பது கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.