தமிழ்நாடு

“பதவிக்காக உதறிச் சென்ற… நன்றிகெட்ட கூட்டம்” - தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காட்டம்! காங்கிரசை சாடுகிறாரா ஸ்டாலின்?

இந்த நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு குறித்து “எட்டப்பர்கள் ரெடியா?” என திமுகவை மறைமுகமாக சாடி இருந்தார்

Muthu Lakshmi

இந்திய அரசியலில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அமர்வில் திருத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடவுள்ள நிலையில், டிசம்பர் 3-ம் தேதி வரை இந்த சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் நிறைவேறாமல் போனது. தற்போது மீண்டும் அதே முயற்சியில் மத்திய அரசு இறங்கலாம் எனக் கூறப்படுகிறது. 

ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்பதால் தொடர்ந்து தமிழகம் அதை எதிர்த்து வருகிறது. குறிப்பாக திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் இந்த நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு குறித்து “எட்டப்பர்கள் ரெடியா?” என திமுகவை மறைமுகமாக சாடி இருந்தார்.

தற்போது இந்த சாடலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்” என்று குறிப்பிட்டுள்ளார். “நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.

பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும் என்றும் கட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.