

மத்திய அரசு வருகின்ற திங்கள் கிழமை அவசரமாக சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அத்தியாவசியமான அரசாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களவையை 2026 நவம்பர் 30, திங்கட்கிழமையன்றும், மாநிலங்களவையை 2026 டிசம்பர் 2, புதன்கிழமையன்றும் மீண்டும் கூட்டுமாறு, மக்களவையின் மாண்புமிகு சபாநாயகரையும், மாநிலங்களவையின் மாண்புமிகு தலைவரையும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இரு அவைகளின் அமர்வும் 2026 டிசம்பர் 3 அன்று நிறைவடையலாம்." எனக் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 33% மகளிர் இடஒதுக்கீடு ஆகியவற்றை இணைத்து கொண்டுவரப்பட்ட மசோதா மக்களவையில் (லோக்சபா) நிறைவேற தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியது.
இந்தநிலையில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வை கூட்டவிருக்கும் மத்திய அரசு மீண்டும் அந்த மசோதாவை முன்மொழியும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், 100 நாட்களுக்கும் மேலாக கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாமல் (unprorogued) இருந்தது. நாடாளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் இருந்தது இந்தமுறைதான்.
இந்த வழக்கத்திற்கு மாறான தாமதம் காரணமாக மத்திய அரசுக்கு மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு மும்மூரமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையரையின்படி மக்களவையில் 543-ஆக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 750 முதல் 848 வரை உயரும். இந்த எண்ணிக்கை உயருவது, மக்கள்தொகை அடிப்படையில் நடக்கும் என்பதனால் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்களுக்கு அரசியல் ரீதியில் இது பெரும் இழப்பாக அமையும். இதனால் ஆரம்பம் முதலே இந்த மசோதாவை எதிர்த்து வந்தது திமுக.
ஆனால் இப்போது இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிராததால் திமுக மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிலர் 543 எம்.பிக்கள் இருக்கும்போதே அனைவருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் தொகுதி மறுவரையரை கூடாது என சொல்லி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்துக்கு பங்கம் வராதபடி, நியாயமான தொகுதி மறுவரையரை வேண்டும் எனப் பேசினார் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி.
இந்த நிலையில் திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் என உணர்த்தும்படி, 'எட்டப்பர்கள் ரெடியா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாக்கூர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.