திமுக இளைஞரணி நடத்தும் திமுக கடைசி நாள் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் ‘எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ அதுபோல அவர்களுக்கு அறிவு என்ற வார்த்தையை கேட்டால் அலர்ஜி. அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் கொள்கையற்ற வெற்று அட்டைகளையும் நாம் பார்த்து அச்சப்பட தேவையில்லை. அமலாக்கத்துறை வைத்து என்னை கூட பயமுறுத்த முயற்சி செய்தார்கள் அதற்கெல்லாம் பயப்படுகிற ஆளா நானு..” என தமிழக வெற்றி கழகம், அதிமுக, பாஜக என எதிராளிகள் அனைவரையும் சூசகமாக சாட்டியிருந்தார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… “நான் தோன்றுவதை பேசுகிறேன் அதை சில நேரம் வைரல் ஆக்கி விட்டு விடுகிறீர்கள். நான் ஏதாவது பேசுவேனா, வாய் விடுவேனா, பிரேக்கிங் செய்தி கிடைக்குமா என்று பார்க்கிறார்கள் இதை வைத்து ஒரு இரண்டு நாட்கள் ஓட்டலாம் ஒன் வே ட்ராஃபிக் ஆகவே இருக்கு உங்களுக்கு ஏதும் நான் கண்டன்ட் கொடுக்க மாட்டேன். எனக்கு தெரிந்து இது போன்ற சிறப்பான நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது இல்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். முற்போக்கு புத்தகக் கண்காட்சி இல்லாமல் இந்த அறிவு திருவிழா சிறப்பாக அமைந்திருக்காது. வருடா வருடம் நடக்கக்கூடிய புத்தக காட்சிக்கு நான் செல்வேன். இந்த ஒன்பது நாட்களில் புத்தகக் காட்சியில் பார்வையிட்டோர் எண்ணிக்கை 20,000 -தை தாண்டியிருக்கும். ரூ.35 லட்சம் ரூபாய்க்கு இங்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
அதிகமாக விற்ற புத்தகம் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகம் 15000 புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. முன்பதிவு திட்டத்தில் மட்டும் 7000 புத்தகங்கள் விற்பனையாக இருக்கிறது. கருத்தரங்கில் நான் பேசும்போது சொன்னேன் வள்ளுவர் கோட்டத்தை தேர்ந்தெடுத்து அறிவித்திருவிழா நிகழ்ச்சி நடத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.
கருணாநிதி 1973 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது வேலைகள் வேகமாக நடந்தது. 1976 ஆம் ஆண்டு கருணாநிதிக்கு அழைப்பு கொடுக்காமல் வள்ளுவர் கோட்டத்தை திறந்தார்கள் . அதன் பிறகு 1989 -ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு பதவிக்கு வந்தார். முத்தமிழ் அறிஞர் கருணாநிதி முதலமைச்சரானார். இங்குதான் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பொதுவாக வள்ளுவர் கோட்டம் என்றால் சில பேர் பயப்படுவார்கள் வள்ளுவர் கோட்டம் ராசி இல்லாத இடம் என்று சொன்னார்கள் அதனால்தான் நான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.
அறிவித்திருவிழா நடத்துவதற்கும் ராசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைப்பவன் நான். இப்படித்தான் சென்ற சட்டமன்ற தேர்தலில் நிறைய பேர் ஜோசியம் எல்லாம் பார்த்தார்கள். கட்டம் சரியில்லை ஜாதகத்திலே சொல்லியாச்சு அந்த வாய்ப்பே இல்லை என்று சொன்னார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நம்முடைய முதலமைச்சரை தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த அறிவித்திருவிழாவை எந்த நோக்கத்திற்காக நடாத்தினோமோ அந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது. நாம் சரியான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற மனநிறைவை நீங்கள் அத்தனை பேரும் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இந்த முற்போக்கு திருவிழா எதற்கு என்றால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற ஒரே என்னத்தோடு தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது. விமர்சனம் செய்பவர்கள் கருத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு பதில் சொல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். அந்த பதில் தேடி நாம் செல்ல வேண்டும் அதற்கு படிக்க வேண்டும் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் பொழுது நம்மாலும் அரசியல் களத்தில் சரியான பாதையில் போக முடியும். உறுதியாக நிற்க முடியும். நாட்டில் சில தலைவர்கள்அவர்களின் தொண்டர்கள் அறிவாளியாக இருப்பதை விரும்பவில்லை. எங்கே நம் தொண்டர்கள் அறிவாளியாகிவிட்டால் நம்மளால் அரசியல் நடத்த முடியாது என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு அதிமுகவை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கு பெரியார் பற்றி தெரியாது அண்ணா என்ன சொன்னார் என்பது தெரியாது. அதிமுக எதற்கு தொடங்கப்பட்டது என்பது தெரியாது. திமுகவை விமர்சிக்க வேண்டும் கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்னும் நோக்கில் தொடங்கப்பட்டது தான் அதிமுக” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு தெரிந்து விட்டால் கொள்கை தெரிந்துவிட்டால் மக்கள் இன்னைக்கு எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கேட்கக்கூடிய கேள்வியை நாளைக்கு அதிமுக தொண்டர்கள் அவர்களுடைய தலைவர்களை பார்த்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள். பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என ஜெயலலிதா சொன்னார். இப்போ ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேட்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏன் நீங்களே சொன்னீர்களே நான்கு மாதம் முன்பாக இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று இப்போ மறுபடியும் பாஜகவுடன் அடிமையாக போய்விட்டர்களே என்று அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பார்த்து கேட்பார்கள். அதனால் தான் அந்த தொண்டர்களுக்கு எதுவுமே தெரியக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த கொள்கையும் கிடையாது திராவிடம் என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னவென்று தெரியாது. அவர் படித்த ஒரே புத்தகத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் ‘சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்’ எனும் அந்த புத்தகதை நானும் எல்லா புத்தகக் காட்சிகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அவர் கொள்கைகளை மட்டும் மறக்கவில்லை அவர்களுடைய தலைவரையே மறந்துவிட்டார். சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட்டு விட்டு வெளியே வந்து அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினேன் என்று கூறினார். அப்படிப்பட்ட தலைவர்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர். இதுதான் இன்றைக்கு அதிமுகவின் நிலைமை.
சில கும்பல் புதுசாக கிளம்பி இருக்கிறது. நாம் அறிவித்திருவிழா நடத்தி நான்கு நாட்களுக்கு பிறகு தான் இப்படி ஒன்று நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி நீங்கள் அறிவு திருவிழா நடத்தலாம் யாரைக் கேட்டு நடத்தினீர்கள்? எதற்காக நடத்தினீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள். ‘அறிவு இருப்பவர்கள் திருவிழா நடத்துறோம்’ அறிவு திருவிழாவில் அவர்களை விமர்சித்து பேசி விட்டோம் என்று கோபம் வேறு. எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமா அவர்களுக்கு அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி..” என தமிழக் வெற்றி கழகத்தை மறைமுகமாக சாடியிருந்தார்.
தொடர்ந்து பேசுகையில், “ திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும்போது கொள்கை அற்ற உங்களுடைய ஆபத்தை பற்றி சில பேர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இதைப் பார்த்து வெறுப்படைந்த அத்தனை பேருக்கும் ஒரு சவால் விடுகிறோம், நீங்களும் நடத்திப் பாருங்கள் நடத்திக் காட்டுங்கள் அடிமைகளையும், பாசிஸ்டுகளையும், கொள்கையற்ற வெற்று அட்டைகளையும் பார்த்து நாம் அச்சப்பட தேவையில்லை அவர்களுக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை. இவ்வளவு நாட்களாக எதிர்க்கட்சிகளை மிரட்ட ED, IT, CBI போன்ற அமைப்புகளை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். அமலாக்கத்துறையை வைத்து கொஞ்ச நாட்களுக்கு என்னை கூட பயமுறுத்த முயற்சி செய்தார்கள் அதற்கெல்லாம் பயப்படுகிறவனா நான்..? 1967 ஆம் ஆண்டு கழகம் ஆட்சி பிடிப்பதற்கு அப்போது இருந்த தொண்டர்கள் எப்படி வேலை பார்த்தார்களோ அதைவிட நாம் சிறப்பாக வேலை செய்ய வேண்டும்.. கடினமாக உழைக்க வேண்டும் அடுத்த ஆறு மாதத்திற்கு நமக்கு எந்த பணியும் கண்களுக்கு தெரியக்கூடாது 2026-ல் நாம் வெற்றி பெற்றால் அது திமுக வெற்றி மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி” என பேசினார். அவரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.