தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா..! நாளை தொடங்க உள்ளது..!

Malaimurasu Seithigal TV

மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா நாளை தொடங்க உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், 2022 - 23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான போட்டிகள் வகுப்பு வாரியாக 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் அனைத்து வகை போட்டிகளும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோயம்புத்தூரில் அனைத்து வகை போட்டிகளும் நடைபெற உள்ளன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருவள்ளூரில் நுண்கலை, நாடகம் மற்றும் மொழித்திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

காஞ்சிபுரத்தில் இசை, கருவி இசை, இசை சங்கமம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடன போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் மூன்று பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை 36 மாவட்டங்களில் இருந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பொறுப்பு ஆசிரியர் துணையுடன் பாதுகாப்போடு சார்ந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரவும் சென்னையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாணவர்களை அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவினங்களை எல் இ பி தலைப்பின் கீழ் மேற்கொள்ளவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 லட்ச ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலையரசன் ,கலையரசி என்ற விருதுகளையும்  சான்றிதழ்களையும் வழங்க உள்ளார்.