அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய வங்கி..? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய வங்கி..? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!
Published on
Updated on
1 min read

அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்து அமலாக்கப்பிரிவு உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது

டிரினிட்டி இண்டர்னேஷனல் என்ற நிறுவனம், டில்லி ஜனக்புரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரித்து வருகிறது. இந்த கணக்கில் இருந்து ஒரு கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 800 ரூபாயை மும்பையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டு, பின் லண்டனில் அதே வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது.

கடந்த 1991ம் ஆண்டு நடந்த இந்த பரிவர்த்தனை, அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டதாக கூறி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு டில்லி அமலாக்கப்பிரிவு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கருவூலம் சென்னையில் அமைந்துள்ளதாக கூறி, வங்கி சார்பிலும், அதிகாரிகள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, அமலாக்கப் பிரிவு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மேல் முறையீட்டு தீர்ப்பாயம் இருந்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி, அமலாக்கப் பிரிவு உத்தரவில் தலையிட மறுத்து விட்டது.

அதேசமயம், அமலாக்கப்பிரிவு உத்தரவை எதிர்த்து 45 நாட்களுக்குள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதித்த நீதிபதிகள், அபராதத்துக்கு  விதித்த தடையை அதுவரை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

45 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யாவிட்டால், அபராதம் விதித்து அமலாக்கப் பிரிவு இயக்குனர் பிறப்பித்த உத்தரவு இறுதியானது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com