தமிழ்நாடு

“இதுதான் ஜனநாயகமா? நீங்க ஜனநாயகனா?” - EPS! அரசு கேபிளில் 3 செய்தி சேனல்கள் நீக்கபட்டத்திற்கு கடும் கண்டனம்! நடந்தது என்ன?

எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?

Muthu Lakshmi

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்து மூன்று தமிழ் செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக MP கனிமொழி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

கனிமொழி அவர்கள், அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது” என்றும் “மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு” எனும் குற்றசாட்டை முன்வைத்தார். ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு கேபிளில் இருந்து மூன்று செய்தி சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு, ஆளுங்கட்சியினரின் அராஜகம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற விவகாரங்களை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்ததால் இந்த சேனல்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யூடியூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் ஒளிபரப்பு முடக்கம் என்ற நிலை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தான் ஜனநாயகமா? இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா? அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா? என்று அடுத்தடுத்த கேள்விகளை முன்வைத்துள்ளார். மேலும் “ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல” என்றும் “ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம் என்றும் பதிவு செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி “உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். “ஆணவத்திலும், அடக்குமுறையிலும் திமுகவையே மிஞ்சிய தவெக!”  என நயினார் நாகேந்திரன் விமர்ச்சித்துள்ளார். இந்த நிலையில், அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி சேனல்களின் ஒளிபரப்பை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் ஊடகத் துறையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.