தமிழ்நாடு

ஸ்டாலினுடன் கைக்கோர்த்த ரஜினி, கமல்.. 'தனி ஒருவனாக' உருவெடுக்கிறாரா விஜய்!

நீண்ட காலமாக பதிலளிக்க காத்திருந்த ரஜினி ரசிகர்கள், இப்போது தேர்தல் களத்தில் விஜய்க்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர்..

மாலை முரசு செய்தி குழு

இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் 'பழைய எதிரி, புதிய எதிரி என யாராக இருந்தாலும் 2026 தேர்தலில் பார்த்துக்கலாம் வா என சவால் விட்டு நிற்கிறார் எனது நண்பர் ஸ்டாலின்' என்று பேசிய வார்த்தைகள் தவிர்க்க முடியாதவை. பழைய எதிரி என்றால் அதிமுக, புதிய எதிரி என்றால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தில் இருந்து பின்வாங்கியது ஒருபுறம் இருந்தாலும், அவரது ரசிகர் பட்டாளம் இன்னும் பெரியது. ரஜினி, ஸ்டாலினை மேடையில் 'நண்பர்' என்று அழைத்ததும், 'சவால் விட்டு நிற்கிறார்' என்று பாராட்டியதும் ஒரு சாதாரணப் பேச்சு அல்ல. இது திமுகவுக்கான அவரது ஆதரவை வெளிப்படையாகக் காட்டுகிறது.

இதற்கு முக்கியக் காரணம், ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நடந்த கடுமையான மோதல்கள் தான். விஜய் ரசிகர்கள், ரஜினிகாந்த்தை ஒருமையில் பேசியும், அவரது படங்களை தரக்குறைவாக விமர்சித்தும் பலமுறை எல்லை மீறிவிட்டனர். இது, ரஜினியின் கோபத்தையும், அவரது ரசிகர்களின் மன வருத்தத்தையும் அதிகரித்தது. நீண்ட காலமாக பதிலளிக்க காத்திருந்த ரஜினி ரசிகர்கள், இப்போது தேர்தல் களத்தில் விஜய்க்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர். ரஜினியின் இந்த பேச்சு, அவர்களுக்கு ஒரு மறைமுகமான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.

மறுபுறம், கமல்ஹாசனின் அரசியல் பயணமும் விஜய்க்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், 'டார்ச்லைட்' எல்லாம் உடைத்து, திமுக-விற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

இந்த தோல்விக்குப் பிறகு, கமல்ஹாசனின் அரசியல் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது, திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளார். தனது கட்சியை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைந்து செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த மாற்றம், தமிழ்நாட்டின் இருபெரும் நட்சத்திரங்களான ரஜினியும், கமலும் இப்போது திமுகவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், விஜய் ஒரு தனி ஆளாக, அரசியல் களத்தில் நிற்கிறார். ஒருபுறம், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள், மறுபுறம், வார்த்தைகளால் கடுமையாகத் தாக்கும் சீமான், இப்போது ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் என ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சீமானின் தாக்குதல்கள் மிகவும் தனிப்பட்டவையாகவும், கடுமையான வகையிலும் உள்ளன. ஆனால், த.வெ.க. தலைமை, தங்கள் தொண்டர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த மௌனம், சில சமயங்களில் பலவீனம் என்று விமர்சிக்கப்பட்டாலும், விஜய்யின் அரசியல் முதிர்ச்சியை இது காட்டுகிறது.

இருப்பினும், இந்த சவால்களுக்கு மத்தியிலும், விஜய்க்கு ஒரு பெரிய பலம் இருக்கிறது: அவரது ரசிகர் கூட்டம். திருச்சியிலும், அரியலூரிலும் நடந்த அவரது பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அவரது மக்கள் ஆதரவைக் காட்டினர். இது, எதிர்க் கட்சிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை எனலாம். எனினும் இது வாக்குகளாக மாறுமா என்பது தனிக்கதை!. அதற்குள் நாம் இப்போது போக வேண்டாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.