
ஜெர்மனி நாட்டின் கோலன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்வில் ஜெர்மனி வாழ் தமிழர்களை சந்தித்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் “எல்லோருக்கும் அன்பு வணக்கம், நல்லா இருக்கீங்களா? பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து நீங்களும் நானும் வேறொரு நாட்டில் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி தான் உண்மையான தமிழ் பாசம். உலகத்தின் எந்த மூலைக்கு போனாலும் தமிழன் இருப்பான், தமிழ் குரலை கேட்கலாம் என சொல்லும் அளவிற்கு உலகெல்லாம் பரவி தன்னுடைய அறிவால், உழைப்பால் உயர்த்திருக்க கூடிய இனம் தான் நம் தமிழினம்.
நில எல்லைகள் கடல் எல்லைகள் நம்மை பிரித்தாளும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது, கண்டங்களை கடந்து விட்டாலும் நம்முடைய தொப்புள் கொடி அறுந்து விடவில்லை, பேரறிஞர் அண்ணா சொல்வர் “ஒரு தாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்புகள் நாம்” என்பார் அப்படி உடன் பிறப்புகளாக தமிழர்களாகிய நாம் இணைந்து இருக்கிறோம். ஜெர்மனி நாட்டில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, நீங்கள் எல்லாம் மதிப்பு மிக்க பதவியில் இருப்பதை பார்த்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சியில் ரொம்ப வேகமா முன்னேறிட்டு இருக்கோம். இந்த வளர்ச்சியை மேலும் விரிவாக்க வேண்டும் என்பதால் தான் இந்த வெளிநாடு பயணம். வெளிநாடுகளுக்கு வரும் போது முதலில் நான் கவனிக்க கூடிய விஷயம் இந்த நாட்டில் வாழும் நம் தமிழர்கள் எப்படி இருக்காங்க, அவர்களின் வாழ்க்கை தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது, தமிழினம் இந்த மண்ணில் சுயமரியாதையுடன் நடை போடுவதை நான் பார்ப்பேன். உங்களின் ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது நொடியில் தமிழ்நாட்டிற்கு சென்றது போல இருந்தது.
தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம். உதாரணமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குழந்தை உடல்நல குறைவால் வெளிநாட்டில் தவித்த போது 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதை சொல்வதற்கு காரணம் வெளிநாடு வாழ் தமிழருக்கு நமது தமிழ்நாடு அரசு இருக்கு என்கிற நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத்தான். வேர்களை தேடும் திட்டம், இந்த திட்டத்தின் படி 15 நாடுகளில் இருந்து 200 மேற்பட்டோர் தமிழநாட்டிற்கு வந்துள்ளனர் அவர்களின் சொந்தங்களோடு சேர்ந்து மகிழ்ந்துள்ளனர். வாழ்வதும் வளர்வதும் தமிழும் தமிழினமுமாக இருக்க வேண்டும்.
அன்போடு உங்களிடம் கோரிக்கை வைக்க வந்துளேன். உலகநாடுகள் போல தமிழ்நாடும் வளர வேண்டும் என்னை போல தான் நீங்களும் நினைப்பீர்கள், நீங்கள் சிறிய தொழில் செய்தலும் அதற்கான முதலீட்டை தமிழ்நாட்டில் செய்யுங்கள். தமிழர் என்ற அடையாளத்தை விட்றாதீங்க.. வேர்களை மறக்காதீங்க.. ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாங்க உங்கள் குழந்தைகளுக்கு நம்ம தமிழினத்தின் பெருமைகளை சொல்லித்தாங்க” என கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.