"இனிக்க இனிக்க வாக்குறுதிகள்.. ஏமாற்றிவிட்டது தவெக" - எடப்பாடி காட்டம்!  
தமிழ்நாடு

"இனிக்க இனிக்க வாக்குறுதிகள்.. ஏமாற்றிவிட்டது தவெக" - எடப்பாடி காட்டம்!

ஏரி குளங்களை தூர்வாருதல், தடுப்பணைகள் கட்டுவது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை... இப்படி ஒரு பட்ஜெட்டை அறிவிக்க எதற்கு 20 துறைகளுக்கும் 20 அமைச்சர்கள்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு இனிமையான வாக்குறுதிகளை அளித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

பட்ஜெட் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "வேளாண் பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் 20 துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். அதேபோல், ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. அமைச்சர் சுமார் 2 மணி 30 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்தார். ஆனால், அதில் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை" என்றார்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும், கரும்புக்கு டன்னுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,500 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், இன்றைய வேளாண் பட்ஜெட்டிலோ, பொதுப் பட்ஜெட்டிலோ அதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் வறட்சி கால நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.15,000, இரண்டு தவணைகளாக ஜூலை–ஆகஸ்ட் மற்றும் ஜனவரி–பிப்ரவரி பருவங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியும் தற்போதைய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என்றார்.

வேளாண் பட்ஜெட் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், "'உழவர் தோழர்' திட்டத்தின் மூலம் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிமை அட்டை வழங்கப்படும் என்றும், அந்த உரிமை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 நிதியுதவி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்த இரண்டு அறிவிப்புகளுக்கும் தற்போதைய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

தேர்தல் நேரத்தில் இனிமையான வாக்குறுதிகளை அளித்து விவசாயிகளை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. திமுகவைப் போலவே வேளாண் பட்ஜெட் என்ற நாடகத்தை தமிழக வெற்றிக் கழக அரசும் நடத்தியிருக்கிறது" என்றார்.

மேலும், "தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் (PACS), 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் பெற்றுள்ள பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.35,000 தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இது தேர்தல் அறிக்கைக்கு முரணானது. இதன்மூலம் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் 'குடிமராமத்து' திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. அதனால்தான், இன்றைய கடுமையான வறட்சியிலும் சில பகுதிகளில் நிலத்தடி நீர் ஓரளவு இருப்பதாகக் கூறலாம்.

ஏரிகள், குளங்களை தூர்வாருதல், தடுப்பணைகள் அமைத்தல் குறித்து இந்த வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. 20 துறைகளை இணைத்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்படியிருக்க, 20 அமைச்சர்கள் இருந்தும் இதுபோன்ற வேளாண் பட்ஜெட்டை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?

பொதுப் பட்ஜெட்டை 2 மணி நேரம் 31 நிமிடங்கள்தான் வாசித்தார்கள். ஆனால், வேளாண் பட்ஜெட்டை 2 மணி நேரம் 35 நிமிடங்கள் வாசித்ததுதான் அதன் ஒரே சாதனை. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் எந்த அறிவிப்பும் இதில் இல்லை.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுப் பட்ஜெட்டுக்கு 'பூஜ்ஜியம்' மதிப்பெண் கொடுத்தேன். இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு 'மைனஸ் பூஜ்ஜியம்' மதிப்பெண்தான் வழங்க வேண்டும்" என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்