Drug Crime Tamil Nadu 
தமிழ்நாடு

“உண்மை இல்லையென்றால் ஏன் சத்தம் போடுகிறீர்கள்?.." ஆதவ் பேச்சால் சலசலத்த அவை! "உரிய பதிலே இல்லை" என வெளிநடப்பு செய்த திமுக

சட்டத்துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேச மறுப்பது ஏன்? என்றும் தனது கேள்வியை முன்வைத்தார்.

Vinvizhi Leninton

4 நாட்களுக்கு பிறகு இன்று கூடிய சட்டமன்றத்தில், தவெக அரசு 100 நாட்களை கடந்தது குறித்து அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் புகழ்ந்து பேசினார். இதனைத்தொடர்ந்து, பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்ந்து முழுக்க ஏராளமான கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். முக்கியமாக கோவையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவினை சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட ஒரு கும்பல் கடந்த திங்கட்கிழமை அடித்து கொலை செய்ததை அவையில் பேசினார். இது பற்றி பேசியபோது, கல்வித்துறை அமைச்சர் நடந்த சம்பவத்தை கோஷ்டி பூசல் என்று கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். 10 பேர் மோதி அதனால் சண்டை நடந்தால் அது கோஷ்டி பூசல். ஆனால், ஒரு மாணவரை 20 பேர் சேர்ந்து அடித்துள்ளதாகவும் அதனால் இது ஒரு படுகொலை என்று எதிர்க்கட்சி தலைவர் அவையில் பேசினார்.

காவல்துறையினர் அமுதனை அழைத்து போதைப்பொருள் பற்றி கேட்டதாகவும் கேட்டபின்பு அதனை நியாயப்படி போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்கவேண்டும். ஆனால், தகவல்களை தந்த அமுதனின் தகவல்களை குற்றவாளிகளிடம் பகிர்ந்துள்ளனர். இதுதான் அமுதனின் மறைவிற்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் பேசினார். மேலும், இது தான் கூறவில்லை என்றும் அமுதனின் பெற்றோரும் இதைத்தான் கூறுகிறார்கள் என்றும் அவர் பேசினார். இந்த சம்பவம் தொடர்பாக களஆய்வு செய்த பல சமூக ஆர்வலர்களும் இதையேதான் சொல்வதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சம்பவத்தினை எதிர்த்து திமுக சார்பில் ஒருங்கிணைத்த கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எதிர்கட்சி தலைவர் பேசினார்.

இது தனிப்பட்ட அல்லது கோஷ்டி பூசல் என்று கடந்து போய்விட முடியாது அரசின் அலட்சியத்தாலும், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையாலேயும் இந்த கொலை நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், அதேபோல் அமுதனை குறித்து தகவலை கசியவிட்ட காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பேசினார். மேலும் சென்னையில் கடந்த 14-ம் தேதி சென்னை திருவெற்றியூர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்த தனுஷ் என்ற மாணவரை போதை கும்பலை தட்டி கேட்டதற்காக பட்டப்பகலில் 30 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை அடித்தே கொலை செய்துள்ளதை குறிப்பிட்டு பேசினார். போதைபொருள் தடுப்பு படையை உருவாக்கியதாகவும், அதற்கு பல கோடியில் செலவு செய்து விளம்பரம் செய்ததாகவும் கூறப்படும் நிலையில் தற்போது கள நிலவரத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்று தனது குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் போதைக்கும்பலின் அட்டுழியத்தை கேள்விகேட்ட சந்துரு, விக்கி என்ற இருவரை வெட்டி கொலை செய்ததையும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனலட்சுமி மற்றும் பூவரசி என்கிற தாய் - மகள் இருவரையும் இரட்டை கொலை செய்துள்ளார்கள். சென்னையில் அம்பத்தூரில் ஆட்டோவில் வைதேகி என்ற இளம்பெண் கொலை, வேலூர் மாவட்டம் குடியாத்ததில் பெண் தலைமை காவலர் தாமரை செல்வி கொலை, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் நடந்த கொலை பற்றி அவையில் பேசினார். இது மட்டுமின்றி தமிழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர்களையடுத்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத்தொடங்கினார். "இந்த 100 நாள் ஆட்சி அடுத்து 25 வருடத்திற்கு அடித்தளமாக அமையும்" என்று பேசினார். மேலும், உயிரிழந்த தனுஷ் மற்றும் அமுதனை தங்களின் குடும்பம், எங்களின் சகோதரர்கள் என்று பேசினார். "காவல்துறையின் அறிக்கையா? அல்லது உயிரிழந்தவர்களின் தாயா? என்ற நிலை வந்தால் எண்களின் முதலமைச்சர் தாயின் பக்கம்தான் இருப்பார்" என்று அமைச்சர் பேசினார். மேலும், முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்று முதலில் கையொப்பமிட்ட 3 திட்டங்களில் ஒன்றான Anti-Narcotics Task Force (ANTF) 264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் 65 Anti-Narcotics Task Force அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "இதன் மூலம் தமிழநாட்டில் இந்த போதைப்பொருள் பழக்கத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தவெக" என்று கூறினார்.

தான் அதிமுக, கம்யூனிஸ்ட் காட்சிகளை பற்றி பேசியதாகவும் ஆனால் திமுகவை பற்றி பேசவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், அமைச்சர், "நாங்கள் எழுந்தால் அங்கிருபவர்கள் (திமுக) பேசவே முடியாது என்று கோவமாக பேசினார். இதனால் அவையில் சலசலப்பு அதிகமானதையடுத்து சபாநாயகர் அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். தொடர்ந்து பேசிய அவர், "2020-க்கு முன்பு இந்த போதை கலாச்சாரம் இல்லை" என்று பேசியதற்கு "ஆதாரம்.. ஆதாரம்" என்று எதிர்க்கட்சியினர் கூச்சல் எழுப்ப தொடங்கினர். அதற்கு, "ஆதாரம் இருப்பதாகவும், உண்மை இருந்தால் அமைதியாதான் இருப்பார்கள், சத்தமிட மாட்டார்கள், உண்மை இல்லை என்றால் பயம் வந்துவிடும் எழுத்து கத்த ஆரம்பித்து விடுவார்கள்" என்றும் அமைச்சர் கட்டமாக பேசினார். போதை கலாச்சரம் அதிகமானால் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகமாகும். 2020ல் 4338 போக்ஸோ வழக்குகள், 2021-ல் 6064, 2022-ல் 6580 வழக்குகள், 2023-ல் 6968 வழக்குகள், அதற்கு அடுத்த வருடம் 10046-ஆக உயர்ந்ததாக அமைச்சர் புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு பேசினார். மேலும், பாலியல் தொந்தரவினால் 2 அரை வயது பெண் குழந்தை பலி, அதற்கு கரணம் திமுகவின் உறுப்பினர் என்று அவையில் ஒரு புகைப்படத்தை காட்டினார். மேலும், 'கற்பழிப்பு' என்ற நீக்கப்பட்ட வார்த்தையையும் அவையில் ஆதவ் அர்ஜுனா உபயோகப்படுத்தினார்.

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் அப்போது துணை முதல்வராக இருந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேள்விகளை முன்வைத்தார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. மேலும், இந்த போதை பழக்கத்தை உருவாக்கியதே அடித்தளத்தில் இருந்து உருவாக்கியதே திமுகதான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். இதனால்தான் மக்கள் அவர்களை தூக்கியெறிந்ததாகவும் அவர் கூறினார். அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பேசத்தொடங்கினார். அதில் அவர், தமிழகத்தில் கடத்த சில நாட்களாக நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை அனைவரும் அறிவர். அதற்கான பதில் சொல்லாமல் கடந்த ஆட்சியில் நடந்தது கடந்த ஆட்சியில் நடந்தது என்று கூறுவதாகவும், சரியான பதில் அளிப்பதில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் பேசினார்.

மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா FIR போடப்பட்டதாக கூறினார். தங்களுடைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இப்போது உள்ள அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்? என்ற அவர் கேள்வியினை எழுப்பினார். மேலும், "தவெக அமைச்சர் ஒருவர் போதைப்பொருள் உபயோகப்படுத்திய வீடியோவை இந்தியாவே பார்த்தது" என்ற குற்றசாட்டுகளை முன்வைத்தார். மேலும், கடந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அதற்கு நடவடிக்கைகள் எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், இந்த ஆட்சியில் சென்னை மாநகர கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் IPS-யிடம் கேட்டால் அவரே தகவல்களை தருவார் என்று எதிர்க்கட்சி தலைவர் பேசினார். "அப்படி போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பின்பு ஏன் அவருக்கு காவல்துறை ஆணையர் பதவியை அவருக்கு வழங்கியுள்ளீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார். இதனையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "போதைப்பொருள் தடுப்பு திட்டத்திற்காக எவ்வளவு ஒதுக்கினீர்கள்?" என்ற கேள்வியை கேட்க அவையில் மீண்டும் அமளி உண்டானது.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலை சிறப்பாக எதிர்கொண்ட காவலர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விருது விலகியது இந்த அரசுதான். அவர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரே விருது வழங்கினார்" என்று எதிர்க்கட்சி தலைவர் பேசினார். தங்களுடைய ஆட்சியில் போதைப்பொருளுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்றால் அந்த 15 காவலர்களுக்கும் எதற்கு முதல்வர் விருது வழங்கினார்? என்று கேள்வியினை எதிர்க்கட்சி தலைவர் கேள்விகளை முன்வைத்தார். "சட்டத்துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேச மறுப்பது ஏன்?" என்றும் தனது கேள்வியை முன்வைத்தார். பின்னர், திமுக சார்பில் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் 'அரசிடமிருந்து உரிய பதில் இல்லை' என்று கூறி எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்