Ramesh HRCE Minister vs minister vinoth  
தமிழ்நாடு

“அமைச்சர் கேள்வி கேட்கக்கூடாது” - சபாநாயகர் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’.. சட்டசபையில் ஏற்பட்ட சலசலப்பு!

உலகத் தரம் வாய்ந்த படிப்பகத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Mahalakshmi Somasundaram

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் செயல்பட்டு வரும் கல்லூரி தொடர்பாக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். கல்லூரியின் செயல்பாடுகள், அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அவர் கேள்விகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கல்லூரி தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வி.எஸ்.பாபு, கல்லூரியின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனிடையே, முந்தைய ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, இந்த கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த படிப்பகத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி தொடர்பாக மேலும் சில கேள்விகளும் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டன.

மகாமகம் விழா குறித்து கேள்வி

இதற்கிடையே, 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், மகாமகம் விழாவிற்கான ஏற்பாடுகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், விழாவுக்கான முன்னேற்பாடுகளை விரைவாக தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அமைச்சர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “அமைச்சர் கேள்வி கேட்கக்கூடாது” என தெரிவித்தார். அதே நேரத்தில், அமைச்சர் என்ற முறையில் அல்லாமல், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வினோத் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

உலகமே வியக்கும் வகையில் மகாமகம்

இதனைத் தொடர்ந்து மகாமகம் விழா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழாவுக்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சருடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருடன் கூட்டம் நடத்தி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மகாமகம் விழாவை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழா உலகமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். இதனால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கல்லூரி தொடர்பான கேள்விகள் முதல், 2028 மகாமகம் விழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவையில் அமைச்சரே கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட சலசலப்பு வரை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த விவகாரங்கள் கவனம் பெற்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்