“ஒரே நாளில் 2 முக்கிய அறிவிப்புகள்” - பால் விலை உயர்வு முதல் ரூ.33,006 கோடி மின் திட்டம் வரை… சட்டசபையில் முதல்வர் விஜய் உரை!

தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவினை சமாளிக்கவும் உதவும்...
Tamil Nadu Power Transmission
Tamil Nadu Power Transmission
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டின் மின்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.33,006 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்வு

கறவை மாடுகளுக்கான தீவனம் உள்ளிட்ட இதர இடுபொருட்களின் விலை உயர்ந்து வருவதால், பால் உற்பத்தியாளர்களின் செலவினம் அதிகரித்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன்படி, ஏற்கெனவே ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டிருந்த பால் கொள்முதல் விலை, தற்போது ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயனடைவார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். பால் கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிப்பதுடன், தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவினை சமாளிக்கவும் உதவும். மேலும், பால் உற்பத்தித் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், அவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.33,006 கோடியில் மின் தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மின் தொடரமைப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னை உள்ளிட்ட முக்கிய மின் நுகர்வு மையங்களுக்கு தடையின்றி கொண்டு செல்வதற்காக, ரூ.33,006 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மின் தொடரமைப்புகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் பகிர்மான கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்

மின் தொடரமைப்பை மட்டும் மேம்படுத்தாமல், மின் பகிர்மான கட்டமைப்பையும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக புதிய 110/111 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், தேவையான இடங்களில் புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளும் நிறுவப்படும். மேலும், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த மின் கேபிள்கள், மின் கடத்திகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படும்.

இதன் மூலம் பழைய மின் கட்டமைப்புகளால் ஏற்படும் மின் தடைகள் குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்ளவும், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தடையின்றி வழங்கவும் இந்த மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com