தமிழ்நாடு

“இடம் மாறிவிட்டீர்கள்... துதிபாட வேண்டாம்!” – ஓபிஎஸ் vs செங்கோட்டையன்.. சட்டப்பேரவையில் கடும் விமர்சனம்!

இந்த நிதிநிலை அறிக்கை பெயர் மாற்றப் பட்டியல் போல உள்ளது..

Muthu Lakshmi

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டினார்.

“தேர்தலின்போது அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டு, தற்போது தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை பெயர் மாற்றப் பட்டியல் போல உள்ளது” என அவர் விமர்சித்தார். மேலும், மகளிர் உரிமைத்தொகை உயர்வு, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார். மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி குறித்தும் கேள்வி எழுப்பினார்.

“நல்லதும் மாற்றம் தான், கேட்டதும் மாற்றம் தான். எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு கிடைத்ததோ பெருத்த ஏமாற்றம்” என ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், " தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை அதற்கான திட்டங்களை ஐந்தாண்டு வரை நிறைவேற்றுவோம்" என்றும் மூன்றே மாத காலத்தில் ஒரு சரித்திரத்தை காட்ட முடியாது.. அப்படி சரித்திரம் படைத்த அரசுகள் இதற்கு முன்பு உள்ளனவா? - செங்கோட்டையன் மேலும் தமிழகமே பாராட்டி கொண்டிருக்கும் தூய ஆட்சியை பார்த்து ஏமாற்றம் என்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நீங்கள் இடம்மாறி இருக்கீறிர்கள் பரவாயில்லை.. அதற்காக துதிப்பாட தேவையில்லை" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து பேசிய ஓபிஎஸ், “அந்த இடமாற்றத்தை முதலில் தொடங்கி வைத்தது நீங்கள் தான்” என செங்கோட்டையனை விமர்சித்தார். தொடர்ந்து, தமிழகத்தின் நிதி மற்றும் அதிகாரப் பகிர்வு, காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் எழுப்பினார். “திமுக உருவாக்கிய அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு” என்றும் அவர் விமர்சித்தார். மேலும், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பட்ஜெட்டால் ஏமாற்றமடைந்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வு முறையை ரத்து செய்யவும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும் வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.