ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் - அர்ச்சனாபுரம் ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் - அர்ச்சனாபுரம்
தமிழ்நாடு

12 மணி வரை வெறும் 8 ஓட்டுகள் தான்.. அர்ச்சனாபுரத்தில் நடந்தது என்ன? அதிர்ச்சியில் உறைந்த அரசியல் புள்ளிகள்!

மதியம் 12 மணி நிலவரப்படி வெறும் 8 வாக்காளர்கள் மட்டுமே பதிவாகியுள்ள அர்ச்சனாபுரம்.

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு தாலுகா, அர்ச்சனாபுரம் பகுதியில் அமைந்துள்ள 62-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில், இன்று மதியம் 12 மணி நிலவரப்படி வெறும் 8 வாக்காளர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தத் தமிழகமே வாக்குச்சாவடிகளில் அலைமோதி வரும் நிலையில், அர்ச்சனாபுரத்தில் நிலவும் இந்த மயான அமைதி அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனாபுரம் வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்திருந்தனர். ஆனால், வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் யாரும் அந்தப் பக்கமே தலைகாட்டவில்லை என்பதுதான் வேதனையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் வாக்காளர்களுக்காகக் காத்திருந்தும், மதியம் 12 மணி வரை ஒற்றை இலக்கத்திலேயே வாக்குப்பதிவு நின்றது, அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதால், மாவட்டத் தேர்தல் நிர்வாகம் உடனடியாக அங்கு என்ன நடக்கிறது? என்பது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்