தபால் வாக்குகள் எனப்படும் போஸ்டல் பேலட் முறை தபால் வாக்குகள் எனப்படும் போஸ்டல் பேலட் முறை
தமிழ்நாடு

காலை 8 மணிக்கே தொடங்கும் 'கவுண்ட்டவுன்!' தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்?

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொங்கவுள்ள நிலையில், ஆணையம் பின்பற்றும் நடைமுறைகள் மிகவும் துல்லியமானவை. குறிப்பாக, தபால் வாக்குகள் எனப்படும் போஸ்டல் பேலட் முறை குறித்து பொதுமக்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்காக இந்த வசதி வழங்கப்படுகிறது. இவர்களின் வாக்குகள் அனைத்தும் ஒரு பெட்டியில் சேகரிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணிக்கே முதலில் எண்ணத் தொடங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன் பிறகு, ஒவ்வொரு தபால் வாக்கும் முறையாகப் பரிசோதிக்கப்படும். குறிப்பாக, வாக்காளர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அளித்துள்ள படிவம் 13A சரியாக உள்ளதா? என்பது சரிபார்க்கப்படும். இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அந்த வாக்குகள் நிராகரிக்கப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் மட்டுமே தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணப்படும்.

தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கி சரியாக அரை மணி நேரம் கழித்து, அதாவது காலை 8.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒருவேளை தபால் வாக்குகள் எண்ணிக்கை 8.30 மணிக்குள் முடியாவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. ஒருபுறம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வர, அதே நேரத்தில் மற்றொரு பக்கம் மின்னணு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும் எனத் தேர்தல் விதிகள் கூறுகின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குகளை எண்ணுவதற்குப் போதிய எண்ணிக்கையிலான மேஜைகள் மற்றும் ஊழியர்கள் ஒதுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். இந்த மொத்த நிகழ்வுகளும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதோடு, ஒவ்வொரு மேஜையிலும் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சிகளின் முகவர்களும் இந்த நடைமுறையை அருகில் இருந்து கண்காணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இது தேர்தல் முறையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றில் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது. மின்னணு இயந்திரங்களின் கடைசி சுற்று வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக, தபால் வாக்குகளின் எண்ணிக்கை முழுமையாக முடிந்து அதற்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் வாக்குகளில் கிடைக்கும் முன்னிலை மற்றும் பின்னடைவு நிலவரங்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இது ஒட்டுமொத்த தேர்தல் முடிவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அதிகாரிகள் இதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.