loyalo collage  
தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் 2026: ஒட்டுமொத்த தமிழகத்தின் கண்களும் லயோலா கல்லூரியை நோக்கி.. ஏன்?

நாதகவின் வெற்றித் தமிழன் மற்றும் தவெக சார்பில் ஜோசப் விஜய் உள்ளிட்ட 47 வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் மோதியுள்ளனர்...

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கிவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் தற்போது சென்னையின் லயோலா கல்லூரியை நோக்கித் திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் சராசரியாக 83.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மையத்தில் மட்டும் கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய 6 முக்கியமான நட்சத்திரத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால் அதிகாலையிலேயே அரசியல் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் லயோலா கல்லூரி வளாகத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்த மையத்தில் அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருப்பது கொளத்தூர் தொகுதியின் ரிசல்ட் தான். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாகக் களம் கண்டுள்ள இந்தத் தொகுதியில், மொத்தம் உள்ள 2,11,772 வாக்காளர்களில் 1,82,382 பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். அதாவது 86.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சரை எதிர்த்து அதிமுகவின் சந்தானகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் சௌந்தர பாண்டியன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பி.எஸ்.பாபு உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால், லயோலா கல்லூரியின் ஒவ்வொரு ரவுண்டு முடிவுகளும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல் பெரம்பூர் தொகுதியிலும் இந்த முறை கடுமையான போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் உள்ள 2,26,296 வாக்காளர்களில் 2,03,072 பேர் வாக்களித்துள்ளனர், இது சுமார் 89.74 சதவீத வாக்குப்பதிவு ஆகும். திமுகவின் ஆர்.டி.சேகர், பாமகவின் திலகபாமா, நாதகவின் வெற்றித் தமிழன் மற்றும் தவெக சார்பில் ஜோசப் விஜய் உள்ளிட்ட 47 வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் மோதியுள்ளனர். இவ்வளவு அதிகமான வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக முடியும் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளின் நிலவரமும் லயோலா கல்லூரியிலேயே தீர்மானிக்கப்பட உள்ளது. வில்லிவாக்கத்தில் 86.01 சதவீத வாக்குகளும், அண்ணா நகரில் 85.65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வில்லிவாக்கத்தில் திமுகவின் கார்த்திக் மோகன், அதிமுகவின் விஜயகுமார் மற்றும் தவெகவின் ஆதவ் ஆர்ச்சுனா ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அண்ணா நகரில் திமுகவின் சிற்றரசு மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இடையே நேரடி மோதல் இருக்கும் நிலையில், தவெகவின் ராம்குமார் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சென்னையின் இதயப் பகுதியான ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிகளும் இங்குதான் நடைபெறுகின்றன. ஆயிரம் விளக்கு தொகுதியில் 82.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், திமுகவின் எழிலன் நாகநாதன் மற்றும் அதிமுகவின் வளர்மதி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். எழும்பூர் தொகுதியைப் பொறுத்தவரை 85.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு திமுகவின் தமிழன் பிரசன்னா மற்றும் அதிமுகவின் அபிஷேக் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 6 தொகுதிகளின் வெற்றி தோல்வி நிலவரம் சென்னையின் அரசியல் முகவரியையே மாற்றக்கூடிய வல்லமை கொண்டது.

லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கான மேஜைகளிலும் முகவர்கள் முன்னிலையில் மிகுந்த கவனத்துடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் போட்டியிடும் தொகுதி என்பதாலும், தமிழக வெற்றிக் கழகம் களம் கண்டுள்ள நட்சத்திரத் தொகுதிகள் என்பதாலும் லயோலா கல்லூரியைச் சுற்றிப் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.