durai vaiko 
தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் தாக்கப்படும் ஒரே பீகாரி இவர்தான்…” துரை வைகோ பரபரப்பு பேட்டி!!

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் அவமதிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் பரப்புரை...

மாலை முரசு செய்தி குழு

பீகார் தேர்தல் வருகிற நவம்பர் 6 -லிருந்து 11 வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரமே அங்கு பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், NDA கூட்டணியும், INDIA கூட்டணியும் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை துவங்கியுள்ளது.  இந்நிலையில் பிகார் மாநிலம் முசாபர்பூரில்  நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் அவமதிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை “ என துரை வைகோ பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி எம்.பி துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழக இளைஞர்கள் பலர் தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குறிப்பாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்த வைக்கப்படுகிறார்கள். அதில் ஈடுபட மறுத்தால் அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி, விருதுநகரை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த 70 நாட்களுக்கு முன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு வேலை தெரியவில்லை என பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுத்தால் தான் இந்தியாவிற்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களை வேலைக்கு அனுப்பியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

ரஷ்யாவில் படிக்க சென்ற தமிழக மாணவர் கிஷோர் சரவணன் ரஷ்யாப்- உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார். இது குறித்து பிரதமரிடமும் வெளியுறவு துறை அமைச்சரிடமும் பேசினேன். அவர்கள் ரஷ்யாவிடம் பேசிய பின்  அவர் போர் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போரில் ஈடுபடுத்த கூடாது என கூறிய நீதிமன்றம் வேறு வழக்கிற்காக சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்திய - ரஷ்யா ஒப்பந்தத்தின்படி அவரை இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படும். 

பீகாரில் நடந்த ஸ்.ஐ.ஆர் குறித்து உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை கேட்டுள்ளது முழுமையான விவரஙகளை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. இந்த சூழலில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள். வட கிழக்கு பருவமழை, பண்டிகை காலத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளுக்கும் பல சிரமங்கள் ஏற்படும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் அவசரஅவசரமாக இதை மேற்கொள்ள கூடாது. அப்படி செய்தால் பீகாரில் நடைபெற்றது பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண்.  தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, யாரும் அவர்களை தாக்கவில்லை.

பிரதமர் ஜாதி மத அரசியல் எல்லைகளை கடந்து பிரதமர் செயல்படவும், பேசவும் வேண்டும். ஆனால் பீகாரில் பிரதமர் பேசி இருப்பது. பீகார் - தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர் பேச்சு மலிவானது, கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என அவர் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.