தமிழ்நாடு

தொடங்கியது அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா...! வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் பரிசு...!

Malaimurasu Seithigal TV

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை வளர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கலைத்திருவிழா தொடங்கியது.

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வளர்ப்பதற்காக கலை திருவிழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன்படி ஓவியம், கவிதை, கட்டுரை, பல குரல் பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கலைத்திருவிழா என்கிற தலைப்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையும் 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை என நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை வகுப்புகளுக்கு தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் ஆனது நடத்தப்பட உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை பள்ளிகளில் இன்று கலைத்திருவிழா தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பள்ளி அளவில் இன்று முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.
 
அதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.