தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். மேலேயும் சீமை கருவேல மரங்களை காற்றும் பணியிலும் ஈடுப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும், தவெக அரசுக்கு மதிமுக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அதை எப்படி செயல்படுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய வைகோ, “புதிதாக பொறுப்பேற்ற அரசு செய்யவில்லை என்று கேட்பது நியாயமானது அதே நேரத்தில் புற்றுநோயை விட கொடியது ஊழல்... கமிஷன், கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இத்தனை லட்சம், தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் இத்தனை கோடி, ஆயா வேலைக்கு இத்தனை ஆயிரம் என எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. தலைவிரித்தாடிய ஊழலை முதல்வர் ஜோசப் விஜய் நீக்கியுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதைவிட ஒரு அரசு வேறு என்ன செய்ய முடியும். நான் தவறு செய்தாலும் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.கமிஷன், கட்டிங் இல்லாத அரசை விஜய் நடத்தி வருகிறார். அதுவே மிகப்பெரிய இமாலய வெற்றி. நிதிநெருக்கடி உள்ளது, அதை எப்படி சமாளிப்பது என்று முதல்வர் ஜோசப் விஜய் திணறிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசு வஞ்சகம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி கொடுத்தால் வாக்குறுதி பலவற்றை அவரால் நிறைவேற்ற முடியும். இந்த ஆட்சி ஆறு மாதம் நீடிக்காது என்று சாபம் விட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆய்வு செய்ததை கண்டித்த வைகோ, திமுக தரப்பில் இருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு மனு கொடுத்ததை கடுமையான கேள்விகளால் விமர்சித்தார். “தமிழகத்தில் கவர்னர் ஆட்சியா? கவர்னர் ஆட்சியை ஏன் கொண்டுவர நினைக்கிறீர்கள்? கவர்னர் வந்தால் இங்கு பிஜேபி தான் ஆட்சி செய்யும். அப்ப நீங்க பாஜகவை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் போலி நாடகமா? என கேள்வி எழுப்பினார். “பாஜகவே வந்து ஆட்சி செய்துவிட்டு போகட்டும் தவெக ஆட்சி செய்ய கூடாது என்ற நினைப்புதான் கவர்னர் அலுவலகத்திற்கு சென்று மோசமான அனுகுமுறை இதுவரை கடைபிடித்து வந்த கொள்கைகளுக்கு எதிராக திமுக மனு கொடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
அதையடுத்து கரூர் சம்பவ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பேசிய வைகோ, “முதல்வர் விஜய் கரூர்க்கு போகக் கூடாது, பேசக்கூடாது என்று திமுகவினர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். உச்ச நீதிமன்றம் சவுக்கால் சாட்டையடி அடித்துள்ளது. அவர் ஏன் போகக்கூடாது? அதை எப்படி தடுக்க முடியும், எங்களை வைத்து தடுக்க உத்தரவு பெற வந்திருக்கிறீர்களா? என்று கடுமையாக சூடு கொடுத்த பிறகு வழக்கினை திரும்ப பெற்றுள்ளனர். அப்படி என்றால் அவர்கள் நோக்கம் என்ன இந்த அரசாங்கத்தை நடத்த விடக்கூடாது என்று நினைக்கின்றனர்” என்றும் அவர்களின் எண்ணம் பலிக்காது என்றும் தெரிவித்தார்.
அதையடுத்து செய்தியாளர் ஒருவர், தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் முக ஸ்டாலின் உடன் கருத்து பரிமாற்றம் தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ, “அது நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து, அவ்வளவு தான்” என்று சூசகமாக பதிலளித்தார். அதையடுத்து அமைச்சர் கீர்த்தனா பள்ளி ஆய்வு சர்ச்சை குறித்து கேட்டதற்கு “என்ன நடந்தது என்ற முழு விவரம் எனக்கு தெரியாது. எதை வேண்டுமானாலும் சொல்லி, இந்த அரசு மீது பாயலாம் என்று நினைக்கின்றனர். என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியாமல் அதை பற்றி நான் கருத்து கூற முடியாது” என்றார்.
குதிரை பேரத்திற்கு “எனக்கும் சம்பந்தமில்லை” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுவதை பற்றி கேட்டதற்கு, “செந்தில் பாலாஜியா, அவர் மலை முழங்கிய மகாதேவன் ஆயிற்றே அவர். அவர் மேல் எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டு வந்தது. குதிரை பேரத்தை கண்டுபிடித்தது திமுக தான். வரும்போது கம்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து மதிமுக எம்எல்ஏ வை ராஜினாமா செய்ய வைத்து திமுக சார்பில் நிற்க வைத்து அவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியதே திமுக தான். இது பெருச்சாளி பேரமா.. நீங்கதான் அதுக்கு வழி காட்டினீர்கள்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேர்ந்த அதிமுகவினரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதை தடுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகளில் எவ்வித இடமும் இல்லை. அவர்கள் நிற்கிறார்களோ இல்லையோ என்று எனக்கு தெரியாது. ஆனால் இருப்பதை தடுக்க முடியாது சட்டப்படி என்றார். தவெக அரசுக்கு வரும் விமர்சனங்களை தடுத்து நிறுத்தி, விமர்சனங்கள் செய்தவர்கள் மீது திருப்பிவிடும் கேடயமாக மதிமுக இருக்கும்” என்றும் உறுதியளித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.