நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னேறிய சமூகத்தினருக்கான பொருளாதார அடிப்படையிலான (EWS) இடஒதுக்கீட்டை நீக்கக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், மத்திய அரசை வலியுறுத்தி நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், முன்னேறிய சமூகத்தினருக்கான EWS இடஒதுக்கீட்டை நீக்கவும் கோரிக்கை வைப்பதாகும்.
இதற்காக கடந்த ஜூலை 18-ஆம் தேதியே காவல்துறையிடம் உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டதாக திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியான ஜனநாயக உரிமையையும் பாதிக்கும் செயல் என திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராக சொந்தம் கொண்டாடும் தவெக அரசு, பெரியார் திடலிலேயே போலீசாரைக் குவித்திருப்பது ஏன்?" என்றும், "திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்திற்கு பணிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும், திராவிடர் கழகத்தின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வையும் EWS இடஒதுக்கீட்டையும் எதிர்த்து ஜனநாயக முறையில் பரப்புரை நடத்த முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த நிலையிலும், காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், "நீட் தேர்வு வேண்டாம் என்பது தவெக அரசின் கொள்கை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதையே வலியுறுத்தும் திராவிடர் கழகத்தின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது" என்றும், இந்தப் பரப்புரைக்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு தமிழக முதலமைச்சரிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறை மற்றும் தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.