தமிழ்நாடு

“முதல்முறையாக தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபம்” - ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற உத்தரவு.. பரவசத்தில் முருக பக்தர்கள்!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து தற்போது தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், பல்வேறு சட்டப் போராட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களுக்குப் பிறகு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீண்ட நாட்களாக சர்ச்சையாக நீடித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து தற்போது தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் முருக பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் பரவசமும் அடைந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடியதால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு, (நவம்பர் 28) ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. மேலும், தீபம் ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், கோயில் அறங்காவலர் குழுவையும் கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அறங்காவலர்கள் யாரும் நிர்வாகப் பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும், இடைக்காலக் குழு அமைப்பது தொடர்பாகவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கை குறித்தும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்த நீதிமன்றம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தனிப்பட்ட முறையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தேவைப்பட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது.

இதற்கிடையே,இன்று நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று ஏற்பாடுகளைக் கண்காணித்தனர். மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் அங்கு நேரில் இருந்தார். பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரும் (CRPF) ஈடுபடுத்தப்பட்டனர். மலைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், தமிழக காவல்துறையினர் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியில் தீபக்கொப்பரையும் நிறுவப்பட்ட நிலையில் மலைக்குச் செல்ல 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இதர பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மலைப்பாதை முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு, நீதிமன்றம் உத்தரவிட்டபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்த இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முருக பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தடைகளையும் சட்டப் போராட்டங்களையும் கடந்து தீபம் ஏற்றப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்