“தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம்” - கண்காணிக்க சென்ற முன்னாள் நீதிபதிகள்.. பாதுகாப்பு பணியில் CRPF!

அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அறங்காவலர் குழுவினர் நிர்வாகப் பணிகளில் ஈடுபடக்கூடாது..
Thiruparankundram Deepam lighting today
Thiruparankundram Deepam lighting today
Published on: 
Updated on: 
2 min read

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவ. 28) மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தீபம் ஏற்றும் நிகழ்வைக் கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் மலைக்குச் சென்றுள்ளனர். மேலும், மலைப்பகுதி முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள மலையில், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்திகை தீபம் அன்று ஒருமுறை மட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Thiruparankundram Deepam lighting today
Thiruparankundram Deepam lighting today

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத தமிழக அரசின் செயல்பாடுகளுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்தும் உத்தரவிட்டனர். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அறங்காவலர் குழுவினர் நிர்வாகப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும், கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ளத் தனிக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதேபோல், இன்று (நவ. 28) தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், மலைப்பகுதியை சிஆர்பிஎப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையினர் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து, இன்று மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மலை உச்சியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபத்தூணில் தீபக்கொப்பரை வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீபம் ஏற்றும் நிகழ்வைக் கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் மலைக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் சென்றுள்ளார்.

இதற்கிடையே, மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் மலை ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணிக்குள் மலைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர்களை CRPF வீரர்கள் மலைக்கு அனுமதித்தனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்