தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து குடும்பத்தினரைத் தாக்கி பெண் குழந்தைகளை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட பெண்களின் தாயார் உயிரிழந்துள்ளார். தந்தையும் சகோதரனும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.
இந்த சம்பவத்தால் சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், "சாத்தாகுளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை: கணவன், மகன் படுகாயம், மகள்கள் கடத்தல் - மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்றால் அதை காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும். இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு அந்தக் குடும்பத்திற்கும், ஞானபிரகாசம் என்பவருக்கும் இடையிலான முன்பகை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே முன்பகை இருக்கும்பட்சத்தில் அதனால் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமையாகும். அந்தக் கடமையை காவல்துறை செய்யவில்லை.
ஒரே குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு, இருவரை அரிவாளால் வெட்டிய கும்பல், இரு பெண் குழந்தைகளையும் கடத்திக் கொண்டு சென்ற கும்பலிடமிருந்து குழந்தைகள் மீட்கப் பட்டிருக்கும் போதிலும், கொலையாளிகளை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை என்பது வருந்தத்தக்கது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் ஓர் அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும். இரவில் உறங்கும் போது கூட ஒரு குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது. சாத்தான்குளம் முதலூரில் நடந்த கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு காரணமான கும்பலை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
வன்முறை சம்பவங்கள் குறித்து கவலை எழுப்பியுள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; திருவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகே காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது.
எவ்வித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியிலிருக்கும் தவெக அரசு, எத்தனை உயிர்ப்போனாலும் நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் தானே இதுபோன்ற கொலை குற்றங்கள் தொடர்கின்றன! முதலமைச்சர் விஜய் அவர்கள், மக்கள் மீது கருணைகாட்டி எதேனும் வேலைப்பார்க்க தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், "வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது; புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
இத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு காட்டும் மெத்தனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை நடத்தப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழ்நாட்டு பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.