tirunlveli Councillor Suspended 
தமிழ்நாடு

“விசிலடித்துக் கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்” - தண்ணீர் பாட்டில்களை வீசி எதிர்ப்பு தெரிவித்த திமுக.. மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு!

இருப்பினும், மேயரின் எச்சரிக்கையையும் மீறி அல்லா பிச்சை மேலும் இரண்டு முறை விசில் அடித்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் விசில் அடித்ததால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, அவரை இரண்டு கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அல்லா பிச்சை. திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு தவெக கட்சி துண்டு அணிந்தபடி அல்லா பிச்சை வந்தார்.

கூட்டத்திற்கு வந்த அவர், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது திடீரென தனது கையில் வைத்திருந்த விசிலை எடுத்து ஊதியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அல்லா பிச்சையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இனிமேல் விசில் அடிக்கக்கூடாது என மேயர் ராமகிருஷ்ணன் எச்சரித்தார். இருப்பினும், மேயரின் எச்சரிக்கையையும் மீறி அல்லா பிச்சை மேலும் இரண்டு முறை விசில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாமன்ற கூட்டத்தில் மீண்டும் கடும் அமளி ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அல்லா பிச்சை மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததைத் தொடர்ந்து, மாமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கவுன்சிலர் அல்லா பிச்சை மீது மேயர் ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, அடுத்த 2 மாமன்ற கூட்டங்களில் அல்லா பிச்சை பங்கேற்கக் கூடாது என சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.

தவெக கட்சி துண்டுடன் வந்த கவுன்சிலர் விசில் அடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம், தண்ணீர் பாட்டில் வீசும் அளவுக்கு சென்றதுடன், இறுதியில் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகராட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.