“இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம்” - சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம்.. முதல்வர் விஜய் அதிரடி முடிவு!

பட்டமளிப்பு விழாவில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது...
“இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம்” - சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம்.. முதல்வர்  விஜய் அதிரடி முடிவு!
Published on
Updated on
1 min read

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை கட்டாயமாக்கும் வகையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் நாளை சட்டப்பேரவையில் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பின்னுக்குத் தள்ளப்படுவதாக சர்ச்சை எழுந்து வருகிறது.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, அதன்பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உரிய முன்னுரிமை பெறவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையைப் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் வகையில், அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் நாளை (10.08.2026) சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் நடைபெறும் அரசு மற்றும் பொதுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வமான முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தொடர்ந்து நீடித்து வரும் சர்ச்சைக்கு இந்தத் தீர்மானம் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com