தமிழ்நாட்டின் 2026–27 பட்ஜெட் அறிக்கையில், நிதியமைச்சர் மரிய வில்சன் அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களையும், அதற்கான நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளையும் வாசித்து வருகிறார்.
அதன்படி, பள்ளிகளில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளவிருக்கும் 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அவர் பேசினார்.
அவர் கூறியதாவது, "Say No to Drugs என்று எப்போதும் வலியுறுத்தி வருபவர் நமது முதலமைச்சர். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நமது இலக்கு, பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும்.
'இளமையில் கல்' என்ற அவ்வையாரின் சொல்லுக்கு ஏற்ப, போதைப்பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை மற்றும் கல்வி இளம் தலைமுறையினரின் மனங்களில் ஆழமாகப் பதிய வேண்டும்.
இதற்கான முன்னெடுப்பின் கீழ், பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வலர் குழுக்களும் அமைக்கப்படும்.
மேலும், இது குறித்த தகவல்களைப் பெறவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்து ரகசியமாக தகவல் அளிப்பதற்காக 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு (Drug Free Tamil Nadu)' என்ற செயலி (App) உருவாக்கப்படுகிறது."