“தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்” - மகளிர், இளைஞர்களுக்கு என்னென்ன திட்டம்.. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா?

இலவசப் பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு...
cm vijay and minister maria wilson
cm vijay and minister maria wilson
Published on
Updated on
1 min read

திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலை முன் வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட உள்ளன, மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் என்னென்ன இடம்பெற உள்ளன என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

திமுக, அதிமுகவின் நீண்டகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தவெக ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தேர்தலின்போது பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அக்கட்சி முன்வைத்திருந்தது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

தவெக அரசின் முதல் பட்ஜெட்

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 200 யூனிட் இலவச மின்சாரம், 'சிங்கப் பெண்' பாதுகாப்புப் படை உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட முக்கிய திட்டங்கள் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட்டில் அந்த வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் ‘2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை’ தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர், இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்புகள்?

தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம்பிடித்த மகளிர் உரிமைத்தொகை உயர்வு, இலவச சிலிண்டர், பெண்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை, மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் விவசாயம் சார்ந்த புதிய திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆட்சிகளில் இருந்து மாறுபட்ட புதிய அணுகுமுறையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் எந்தெந்த அறிவிப்புகளை தாங்கி வருகிறது என்பதற்கு இன்று சட்டப்பேரவையில் விடை கிடைக்க உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com