stray dogs issue 
தமிழ்நாடு

தெரு நாய் விவகாரம்; நீயா நானா -வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

நிகழ்ச்சியில், தெரு நாய்களுக்கு எதிராகவும், நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு எதிராகவும் ...

மாலை முரசு செய்தி குழு

தெரு நாய்கள் பிரச்சனை குறித்து தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கை  தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் (ஸ்டார் விஜய்) தெரு நாய்கள் பிரச்னை குறித்து விவாத நிகழ்ச்சி (நீயா நானா) நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு பின், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்காலத்தில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதை இந்திய ஒளிப்பரப்பு, மற்றும் டிஜிட்டல் அமைப்பு ஒளிப்பரப்ப அனுமதிக்க கூடாது என்பதை உறுதிப்படுத்தக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் காந்த், பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில், தனியார் தொலைக்காட்சி, நிகழ்ச்சி தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நெறியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, தெரு நாய் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், தெரு நாய்களுக்கு எதிராகவும், நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளது என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவாகரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிட இருப்பதாகவும் அதனால், வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.