"ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுடன் இணைக்கப்படும்; பெட்ரோல் விலை ஏறும்..." - ட்ரம்ப் பேச்சு! 
தமிழ்நாடு

"ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுடன் இணைக்கப்படும்" - ட்ரம்ப் சூளுரையால் பெட்ரோல் விலை ஏறும் அபாயம்!

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா ஈரான் இடையே இன்னும் ஒப்பந்தம் எட்டாத நிலையில், இந்த கருத்து பதற்றத்தை அதிரிகரித்துள்ளது.

மாலை முரசு செய்தி குழு

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதை தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, ஏற்கெனவே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

"ஈரானை முழுமையாகத் தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிக்கப் போகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை எப்படி, எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பது குறித்து அவர் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

தற்போது ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமான இறையாண்மை அல்லது முறையான நிர்வாக உரிமை இல்லை. டிரம்பின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், அது சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் பிராந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், டிரம்பின் கருத்துக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அடிபணியாது என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்கா - ஈரான் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க திட்டம்

மேலும், ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump

ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு முன்னதாக, "அடுத்த வாரமே ஈரான் மீது இதுவரை கண்டிராத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும்" என்று அமெரிக்க கருவூலத் துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். ஈரானை இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதன் மூலம், ராணுவ நடவடிக்கையுடன் பொருளாதார அழுத்தத்தையும் தீவிரப்படுத்தி, ஈரானை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிகிறது.

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் ட்ரம்ப், ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையையும் நியாயப்படுத்தி வருகிறார். ஹோர்முஸ் நீரிணை விவகாரத்திலும் அவரது நிலைப்பாடு மேலும் கடுமையாகியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான அழுத்தத்தைத் தொடர்ந்து அதிகரிக்கப் போவதாக அமெரிக்க நிர்வாகம் கூறியுள்ளது.

"பெட்ரோல் விலை ஏற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" - டிரம்ப் வேண்டுகோள்

கார்டன் சிட்டியில் பேசிய டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறாமல் தடுப்பதற்கான விலையாக, சற்று அதிகமான பெட்ரோல் விலையை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

"நாங்க செய்யறது எங்களுக்கு மட்டும் இல்ல, உலகத்துக்கே பெரிய சேவை. பெட்ரோலுக்கு கொஞ்சம் அதிகமா செலவு பண்ணனும்னாலும், இதுக்குப் பின்னாடி இருக்கிற பெரிய நோக்கத்தை மக்கள் புரிஞ்சுக்கணும்," என்று டிரம்ப் தெரிவித்தார்.

எரிசக்தி செலவுகளைக் குறைப்பதாக தேர்தல் பிரசார காலத்தில் டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதிக்கு நேர் மாறாக, எரிபொருள் விலை உயர்வு நிலவும் இந்த சூழல், அவருக்கு அரசியல் ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஈரான் மோதலால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை முக்கிய பிரச்சினையாக கையிலெடுக்க ஜனநாயகக் கட்சியினர் ஏற்கெனவே முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலக எரிசக்தி வர்த்தகத்தில் ஹோர்முஸின் இன்றியமையாத பங்கு

உலகளவில் பரிமாறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜியில் சுமார் 20 சதவீதம், சாதாரண சூழலில் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படுகிறது. இதன் காரணமாகவே, சர்வதேச எரிசக்தி சந்தைக்கு இந்த நீர்வழிப் பாதை மிக முக்கியமான தமனியாக விளங்குகிறது.

நீண்ட காலத்திற்கு இந்தப் பாதை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, இந்த வாரம் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலரை நெருங்கியுள்ளது. அதேபோல, அமெரிக்காவில் பெட்ரோல் விலையும் ஏறத்தாழ கேலனுக்கு 4 டாலராக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஈரான் மோதலை இன்னும் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்பின் நிலைப்பாடு இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தகயிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்