ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி கப்பல் மாலுமி உடலை முறையாக பராமரிக்கவில்லை என சக ஊழியர்கள் வீடியோ வெளியிட்டு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கப்பல் ஓமன் நாட்டு துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தபோது உடல்நல பாதிப்பு காரணமாக நிஷாந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் கப்பலில் இரண்டாம் நிலை அலுவலராக (Second Officer) பணியாற்றி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அவரது கணவர் மனைவியிடம் பேசியுள்ளார். தற்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சராபின் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சரோபின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், நிஷாந்துடன் பணியாற்றிய சக கப்பல் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், உயிரிழந்த நிஷாந்தின் உடலை கப்பல் நிறுவனம் முறையாக குளிர்சாதன வசதியில் பாதுகாக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் வைத்துள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், உடலை முறையாக பராமரிக்காமல் கப்பலில் உள்ள ஒரு பகுதியில் வைத்திருந்ததாகவும், உடல் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்ந்த தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சக ஊழியர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கப்பல் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு, நிஷாந்தின் உடலை பாதுகாப்பாக மீட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என சக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்தனை எதிர்த்து கப்பலில் வேலை செய்யும் பலரும் தங்களது எதிர்ப்பு குரல்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துவருகின்றனர். தங்கள் ஆயுதம் ஏந்திய இராணுவ படைகள் இல்லை. குறிவைத்து இந்திய கப்பல்கள் தாக்கப்படுகிறது. எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று கப்பல்களில் வேலை செய்யும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டவண்ணம் உள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் சோகத்தையும், கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.