அமைச்சராகும் தஞ்சாவூர் MLA; வெளியேற்றப்படும் 3 புள்ளிகள்... TVK அரசில் மாற்றம்? 
தமிழ்நாடு

அமைச்சராகும் தஞ்சாவூர் MLA; வெளியேற்றப்படும் 3 புள்ளிகள்... TVK அரசில் மாற்றம்?

தவெக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 3 அமைச்சர்களுக்கு கல்தா, இலாகா மாற்றம், புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு என விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து நான்கு மாதங்களை நெருங்கும் சூழலில், கட்சியில் அதன் தலைவர் விஜய் பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தற்போதைய அமைச்சரவையின் செயல்பாடு முதலமைச்சருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுவதாகவும் கூறப்படுகிறது.

வெளியாகியுள்ள தகவல்களின்படி, அமைச்சரவையில் சிலரை நீக்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் அமைச்சர்களின் தகுதி வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டதால், தலைமையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாதவர்கள் கலக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

தடுமாறும் அமைச்சர்கள் அதிருப்தியில் தலைமை

35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை அமைக்கும்போது, முன்னெப்போதும் இல்லாத அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 31 தவெகவினர், 2 காங்கிரஸ் உறுப்பினர்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில், தவெக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, மரிய வில்சன் சட்டப்பேரவையில் எழுப்பிய விவகாரங்களும், லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொள்ளும் வகையில் அவர் பேசியதாக எழுந்த சர்ச்சையும் தேவையற்ற விவாதங்களைக் கிளப்பின.

அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தவெக அமைச்சர் சரத் மீது போதைப்பொருள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தரப்பினர் முன்வைத்தனர்.

இதுபோன்ற மேலும் சில விவகாரங்கள் அமைச்சர்களை எதிர்மறையான வெளிச்சத்தில் வைத்திருந்தன. இதுமட்டுமல்லாமல், தலைமையின் உளவுத்துறையும் அமைச்சர்கள் மீது சில புகார்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்களுக்கு எதிராக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் செயல்பட்ட விதம், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள், சொந்தத் தொகுதியில் மேற்கொண்ட பணிகள், சட்டப்பேரவை செயல்பாடு, தவெகவினரிடம் நடந்துகொண்ட விதம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, முதலமைச்சர் விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் விஜய் அந்தந்த துறைச் செயலர்களிடமும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று முடிவடையும் நிலையில், கூட்டணிக் கட்சியினருடனான சந்திப்புக்குப் பிறகு, இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆட்சியில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எந்தெந்த இடங்களில் அமைச்சர்கள் தவெக தொண்டர்களை மதிக்காமல் நடந்துகொண்டுள்ளனர், அதிகாரிகளுடன் இணைந்துகொண்டு பழைய ஆட்சியின் பழக்கங்களை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்பது குறித்து தலைமைக்கு உளவுத்துறை எடுத்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு முதல்வரின் விருப்பத்துக்கு உரியவராகிவிட்டார் சபாநாயகர். அமைச்சர்களின் சட்டப்பேரவை செயல்பாடு குறித்து இவரிடம் நேரடியாகவே அறிக்கை பெறுகிறாராம் முதலமைச்சர்!

புதிய முகங்களுக்கு வாய்ப்பு! இலாகா மாற்றத்துக்கு தயாராகும் தலைமை!

இதுவரை வெளியே கசிந்துள்ள தகவல்களின்படி, ஒரு பெண் அமைச்சர் உட்பட 3 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கு இலாகா மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய இலாகாக்களில் உள்ள சில அமைச்சர்கள் சிறிய துறைகளுக்கு மாற்றப்பட்டு, தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட அடிப்படையில் பொறுப்பு அமைச்சர்கள் இல்லாத பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய் சரவணன் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் கீர்த்தனாவிடம் இருந்து தொழில்துறை பறிக்கப்பட்டு, தலைமைக்கு நெருக்கமாக உள்ள மற்றொரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கீர்த்தனாவுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்களை நீக்குவது குறித்து முடிவெடுப்பதில் கட்சி மேலிடம் திணறி வருகிறது. நீக்கப்படும் அமைச்சர்களைச் சமாளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில் உள்ள சிக்கலையும் தீர்க்க புதிய வியூகத்தை தலைமை சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்