ஜோசியர் முதல் RTI வரை: தவெக அரசு யூ-டர்ன் அடித்த அறிவிப்புகள்.. என்ன காரணம்? 
தமிழ்நாடு

விஜய்யின் ஜோசியர் முதல் RTI வரை: தவெக அரசு யூ-டர்ன் அடித்த அறிவிப்புகள்.. என்ன காரணம்?

இன்று பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கும் அரசாணைக்கு எதிராக மீனவ குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது முதல் அரசு வெளியிட்ட பல அறிவிப்புகள் திரும்ப பெறப்பற்றுள்ளன. எந்த அரசிலும் இல்லாத அளவு சர்ச்சையான அறிவிப்புகளை வெளியிட்டு அதனைத் திரும்ப பெற்று வருகிறது.

அரசு அமைந்த சில நாட்களில் விஜய்யின் பிரத்யேக ஜோதிடரான ரத்தன் பண்​டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு பிறகு அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

ஜூன் மாதம் தாம்பரம், ஆவடி, மதுரை, கோவை, திருச்சி உள்பட 12 மாநகராட்சிகளில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்குவது தொடர்பாக, தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இதற்கு இடதுசாரிகள், தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த டெண்டரும் திரும்பப் பெறப்பட்டது.

டெல்லியில் தரமேந்திர பிரதானுக்கு எதிரான CJP போராட்டம் வலுபெற்றபோது, மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு கரப்பான் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதற்கும் மாணவர் அமைப்புகள், இடதுசாரிகள், கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரண்டே நாளில் இந்த அறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது.

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகள், அடிப்படைத் தேவைகளை தலைமை ஆசிரியர்களின் சொந்த செலவில் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அதுவும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

ஆகஸ்ட் மாதம், சென்னையில் சொத்துவரியை மாற்றியமைப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டது. எதிர்ப்பு காரணமாக அதுவும் திரும்ப பெறப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா மூன்றாம் கட்ட விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அறிவிக்கையும் திரும்ப பெறப்பட்டது.

இந்தச் சூழலில், நேற்று சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தவெக அரசின் கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அந்த அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இடதுசாரி கட்சியிலுள்ள நபர்களின் பெயர்களைச் சேகரித்துக் கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாசாமி. உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இதற்கு இடதுசாரிகள், பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட தமிழ்நாடு அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றதோடு, குறிப்பிட்ட வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.

இன்று பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கும் அரசாணைக்கு எதிராக மீனவ குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அரசாணை இறுதியான முடிவு அல்ல என குழப்பமான வாதத்தை முன்வைத்தார் ஆதவ் அர்ஜுனா. மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இதுவும் திரும்பப் பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசானது மக்கள் எதிர்ப்புக்கு செவிசாய்த்து அரசாணைகளைத் திரும்பப் பெறுவதாக தவெகவினர் கூறினாலும் பொதுநலனுக்கு எதிரான சர்ச்சைக்குரிய அரசாணைகள் தொடர்ச்சியாக வெளியாவது சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

சிலர் இது புதிய அரசின் அனுபவமின்மையைக் காட்டுவதாகக் கூறுகின்றனர். சிலர் நேரடியாக அதிகாரிகளின் ஆட்சி நடப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். அதிகாரிகள் கூறுவதை ஆராய்ந்து அறியும் திறன் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்