தமிழக வெற்றிக் கழக அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டாக இது அமைந்துள்ள நிலையில், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள், தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அவர் அறிவித்தார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "திமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்" என்று விமர்சித்தார்.
"முழுமையாக பார்க்கும்போது இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஜீரோ. இந்த பட்ஜெட் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. ஆட்சிக்கு வரும்போது மாற்றம் என கூறி வந்தார்கள். இப்போது என்ன மாற்றம் என்று கேட்டால், எல்லாவற்றுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்கு ஆய்வு நடந்தது? அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது எதற்கு?" என்றும் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல் இல்லை. தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் திட்டம் என்றார்கள். ஆனால் இன்று பட்ஜெட்டில், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் இந்த திட்டம் பொருந்தும் என்று அறிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்ற தெளிவும் இல்லை. தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பூஜ்ஜியமாக இருக்கிறது" என்றார்.
மேலும், "அனைத்து திட்டங்களும் கடந்த ஆட்சியில் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தவை. மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது திமுகவின் சாதனை. அதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என்றும் தெரிவித்தார். "பட்ஜெட்டில் ஒவ்வொரு துறையைப் பற்றியும் பேசும்போதும், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது என்று நிதியமைச்சர் பெருமையோடு சொல்கிறார். திமுகவின் சாதனைகளை இப்போதாவது ஒத்துக்கொண்ட முதலமைச்சருக்கு நன்றி."
"மடிக்கணினி, வீடு வழங்கும் திட்டங்கள் என திமுகவின் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?" என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, "ஆளுங்கட்சியில் சேரும் போதே குற்றங்கள் செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியது போல், துணிச்சலோடு செய்து கொண்டிருக்கிறார்கள்." என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், இந்த அரசு இவ்விஷயத்தில் எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கவலைகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை; மாறாக, பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அப்படியென்றால், முதலமைச்சரிடமிருந்து பதில்களை எதிர்பார்த்து எதிர்க்கட்சிகள் ஏன் சட்டமன்றத்திற்கு வர வேண்டும்? தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் அவகாசம் கேட்டார். ஆனால், இன்றைய பட்ஜெட்டில்கூட அவற்றைச் செயல்படுத்துவது குறித்த எந்தவொரு செயல்திட்டமோ அல்லது அறிவிப்போ இல்லை. இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் அரசைக் கேள்வி கேட்க திமுக தயாராக உள்ளது. மேலும், அந்தக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மாற்றத்தைக் கொண்டுவருவதாக தவெக வாக்குறுதியளித்தது. ஆனால், அவர்கள் கொண்டுவந்த ஒரே மாற்றம் பழைய திட்டங்களின் பெயர்களை மாற்றியது மட்டுமே. மேகதாது திட்டத்தைத் தடுக்கும் தைரியம் தவெக அரசுக்கு இல்லை." என்றார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.