தமிழ்நாடு

“திமுகை விட தவெக பெட்டர்” -அன்பில், நேரு மீதான வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கையா? வன்னி அரசு பதில்!

தற்போதைய ஆட்சி மிகச் சிறப்பாக நடப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திட்டமிட்டே எதிர்க்கட்சிகள்

Muthu Lakshmi

மாநில உரிமைகளை பாதுகாப்பதில் முந்தைய திமுக அரசை விட தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி சரியாக நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதாகவும் குறிப்பிட்டார். 

விருதுநகர் மாவட்டம் அயன் ரெட்டியாபட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு. பாண்டிச்சேரி அரசு தீபாவளிக்கு மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்திருக்கிறது அதுபோல் தமிழ்நாடு அறிவிக்குமா? என்ற கேள்விக்கு “அரசு ஊழியர்களுக்காகத் தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் என்னென்ன திட்டங்கள் தேவை எனக் கேட்டறிந்தாலும், அவற்றை முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு சென்று நிறைவேற்ற வழிவகை செய்வோம்.

மேலும் அவர் பேசியதாவது, சமூகநீதித் துறையின் சார்பாக 67 புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அக்கட்டிடங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும். குறிப்பாக, வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கும், பள்ளி கல்லூரிகளின் பயிலும் மாணவர்களுக்கும் சென்ற முறையை விட இந்த முறை அதிகமான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பட்ஜெட்டில் மேலும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் நிலவியபோது, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நாங்களும் களத்தில் நின்று போராடினோம். ஆனால், தற்போதைய எதிர்க்கட்சிகள் சிறிய பிரச்சினை என்றாலே ஊதிப் பெரிதாக்கும் வேலையை மட்டுமே செய்து வருகின்றன. வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய ஆட்சி மிகச் சிறப்பாக நடப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் அரசைக் குறை கூறி திசைதிருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஜி.எஸ்.டி வருவாயில் தமிழகம் 3 சதவீதம் மட்டுமே பெற்றுப் பின்தங்கியுள்ளது என்று தங்கம் தென்னரசு கூறிய கருத்து குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, தற்போதைய நிதி அமைச்சர் விரிவான விளக்கமளித்துள்ளார் என்று தெரிவித்தார். இந்தக் கேள்விக்கான மேலதிக விளக்கங்களை நிதி அமைச்சரிடமே விரிவாகக் கேட்டுக் தெரிந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

மாநில உரிமையைப் பொறுத்தவரையில், 'வந்தே மாதரம்' பாடலைத் தான் கண்டிப்பாகப் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சூழலில், "நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைத்தான் பாடுவோம்" என்று உறுதியாக நின்றவர் நமது முதலமைச்சர். இந்த அரசு மாநில உரிமைகளை முழுமையாக பாதுகாக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் திமுக அரசு எவ்வாறு மாநில உரிமைகளைப் பாதுகாத்ததோ, அதைவிட அதிகமாக தற்போதைய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கர்நாடகா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்குத் தனித்தனி கொடிகள் உள்ளன; அதனை அந்தந்த மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. தேசியக் கொடியின் அருகிலேயே அம்மாநிலக் கொடிகளையும் ஏற்றுகிறார்கள். அது சட்டப்படியும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். மாநிலத்திற்கான தனித்தனி கொடிக் கட்டமைப்பு என்பது அந்த இனத்தின் உரிமையை பிரதிபலிப்பதே தவிர, அது தவறான கருத்தோ அல்லது கொள்கையோ அல்ல. இதில் விசிக எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவர்கள் அதனைச் சட்டப்படி எதிர்கொள்வோம்" எனக் கூறியுள்ளனர். ஆதாரங்களின் அடிப்படையில்தான் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. விசாரணை முடிவில்தான் உண்மை என்னவென்று தெரியவரும்; இது எவ்வகையிலும் பழிவாங்கும் படலம் அல்ல" என்று அமைச்சர் பதிலளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.