தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி, பள்ளிக்கல்வி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் வேட்டி, சட்டை அணிந்து வரும் வகையில் மரபு ஆடை தினத்தைக் கொண்டுவருவது, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார் ராஜ்மோகன்.
அப்போது, "இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ. 5 கோடி தருகிறேன் என ஒருவர் பேசினார். இது லயோலா மணிக்கும் தெரியும். ஆனால், நான் சிரித்துக்கொண்டே லயோலா மணியிடம் கூறினேன். 500 கோடி கொடுத்தாலும், பொருத்தமில்லாத ஒருவருக்கு முதல்வர் விஜய் எந்தப் பதவியையும் தரமாட்டார். நான் அவரின் தம்பி. ஒரு ரூபாய் கூட வாங்காமல், பொருத்தமான புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு அந்தப் பதவியைத் தருமாறு தளபதி (விஜய்) சொல்லியிருக்கிறார் என்று கூறினேன்" எனப் பேசினார் ராஜ்மோகன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அமைச்சர் ராஜ்மோகன், லயோலா மணி ரூ. 5 கோடி கொடுக்க ஒருவரை அழைத்து வந்ததாக வெளிப்படையாகக் கூறுகிறார்.
புஷ்பவனம் குப்புசாமி தகுதியான நபர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார்? அவரைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமா, இல்லையா?
விஜய் ஒரு நேர்மையான முதலமைச்சராக இருந்தால், தனது அமைச்சர் என்றும் பார்க்காமல், லஞ்சம் கொடுக்க முன்வந்த அந்த நபரை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமா, இல்லையா? இதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு" என்றார்.
இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பலரும் 5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
லஞ்சம் கொடுக்க வருபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முன்வராத நேர்மை இல்லாத அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு உள்ளதாக விமர்சனங்கக்கள் எழுந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.