தமிழ்நாடு

கரூர் வழக்கு கைமீறி செல்லும் 'அபாயம்'.. டெல்லி விரைகிறாரா விஜய்!? - 'அந்த' முக்கிய தேசிய தலைவருக்கு சென்ற ஃபோன் கால்!?

குறிப்பாக அவர் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கவும் இந்த உயர் மட்டத் தலையீட்டைக் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் மட்டுமின்றி, கட்சியின் நிர்வாக மற்றும் சட்டரீதியான எதிர்காலத்திலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக-விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இந்தக் கடுமையான சட்ட நெருக்கடியில் இருந்து மீள, நடிகர் விஜய் நேரடியாக டெல்லியில் உள்ள தேசியத் தலைமையின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்தது என்ன? - காவல்துறையின் குற்றச்சாட்டுகள்:

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தின் மூல காரணம், கட்சி நிர்வாகம் விதிமுறைகளைப் பின்பற்றாததும், நடிகர் விஜய்யின் வருகைத் தாமதமுமே என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை (FIR) வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறது.

விதிமுறைகளைப் பின்பற்றாமை: பொதுக்கூட்டத்திற்கு 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்ட நிலையில், 25,000க்கும் அதிகமானோரைத் திரட்டியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியது. ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ போதுமான நிர்வாக ஏற்பாடுகளைத் தவெக செய்யவில்லை.

வருகைத் தாமதம்: பேரணிக்காகத் திட்டமிடப்பட்டிருந்த நேரத்தை விட, நடிகர் விஜய் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு மிக முக்கியக் காரணம் என்று காவல்துறை குற்றம் சாட்டுகிறது. பகல் 12 மணியளவில் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 7 மணியைக் கடந்தே அவர் பொதுக்கூட்ட இடத்தைச் சென்றடைந்தார்.

அத்துமீறல் மற்றும் எச்சரிக்கையைப் புறக்கணித்தல்: கரூர் மாவட்டத்திற்குள் நுழைந்த பிறகு, விஜய் பல இடங்களில் அனுமதியற்ற சாலைப் பேரணிகள் (Roadshows) மற்றும் திடீர் வரவேற்புகளில் பங்கேற்றதால் தாமதம் ஏற்பட்டது. மேலும், நெரிசலின் அபாயத்தைக் குறித்துக் காவல்துறை அதிகாரிகள், தவெக பொதுச் செயலாளர் பூசி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் எச்சரித்தும், அவர்கள் அதைப் புறக்கணித்துவிட்டனர். கூட்டத்தினர் மரங்கள் மற்றும் தகரக் கொட்டகைகள் மீது ஏறுவதைத் தடுக்கத் தவறியதாலேயே அவை இடிந்து விழுந்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்றும் காவல்துறை தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகள்:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதும், தவெக பொதுச் செயலாளர் பூசி ஆனந்த் முன் ஜாமீன் கோரியபோதும், கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பி, வழக்கை ஒரு புதிய தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இடத் தேர்வு குறித்துக் கேள்வி: "வேலுச்சாமிபுரம் சந்திப்பு போன்ற ஒரு மிகக் குறுகலான இடத்தைத் தேர்வு செய்தது ஏன்? அதிகக் கூட்டம் வரும் என்று தெரிந்தும், மைதானம் போன்ற விசாலமான இடத்தைக் கோராதது ஏன்?" என்று நீதிபதி நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இது இடத் தேர்வில் இருந்த நிர்வாகக் குளறுபடியை அழுத்தமாகச் சுட்டிக் காட்டியது.

தவறான கணக்கு: "சம்பள நாள் என்பதால் மக்கள் வர மாட்டார்கள் என்று கணக்கிட்டதாக நீங்கள் கூறுவது மழுப்பலானது. இ.பி.எஸ். கூட்டத்திற்கு வருபவர்களைப் போல அல்லாமல், விஜய்யைப் பார்க்க அனைத்துத் தரப்பு மக்களும், ஏன் குழந்தைகள் கூட வருவார்கள் என்று தெரியாதா? 10,000 பேர்தான் வருவார்கள் என்று எப்படித் தவறாகக் கணித்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தலைவரின் பங்கு: எல்லாவற்றுக்கும் மேலாக, "விஜய்க்கு இது தெரியுமா? அதிகக் கூட்டம் வரும் என்றும், இந்த இடத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவருக்குத் தெரியுமா, தெரியாதா?" என்று நீதிபதி நேரடியாகக் கேள்வியை எழுப்பினர்.

அடைக்கப்பட்ட கதவுகள்; டெல்லி நோக்கிய நகர்வு:

காவல்துறையின் அறிக்கையும், நீதிமன்றத்தின் கேள்விகளும் தவெக மற்றும் அதன் தலைவர் விஜய்க்கு எதிராகவே வலுவாகத் திரும்பி உள்ளன. குறுகலான இடத்தைக் கேட்டது, அதிகக் கூட்டத்தை எதிர்பார்க்கத் தவறியது, மற்றும் 7 மணி நேரத் தாமதம் என அனைத்துச் சூழ்நிலைகளும் இந்த வழக்கில் கைது நடவடிக்கை ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளது.

இந்தச் சூழலில்தான், விஜய் டெல்லி அரசியலில் மிக முக்கியப் பங்கு வகிக்கும், பிரதமரின் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மத்திய அமைச்சர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாகத் தகவல்கள் உறுதியற்ற நிலையில் கசிந்துள்ளன. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களைத் தீர்க்கவும், அரசியல் ரீதியானப் பாதுகாப்பை உறுதி செய்யவும், குறிப்பாக அவர் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கவும் இந்த உயர் மட்டத் தலையீட்டைக் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில், நடிகர் விஜய் அல்லது தவெக-வின் முக்கியத் தலைவர்கள் சிலர் நேரடியாக டெல்லிக்குச் சென்று, கரூர் சம்பவத்தில் நடந்த உண்மைகளையும், தங்களுக்கு எதிராக உள்ளதாக அவர்கள் கருதும் அரசியல் நகர்வுகளையும் மத்தியத் தலைவரிடம் விளக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியின் அழுத்தத்தில் இருந்து விடுபட, தேசியத் தலைமையின் மறைமுக ஆதரவைப் பெறுவதே விஜய்யின் வியூகமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த டெல்லிப் பயணம், தவெக-வின் சட்டரீதியானப் போராட்டத்திற்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமையலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.