"அதெப்படி இதுகூட தெரியாமத் தான் அனுமதி கேட்டீர்களா?".. விட்டு விளாசிய நீதிமன்றம் - விழி பிதுங்கி நிற்கும் தவெக

நீதிமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிபதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராகக் கடுமையான சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.
"அதெப்படி இதுகூட தெரியாமத் தான் அனுமதி கேட்டீர்களா?".. விட்டு விளாசிய நீதிமன்றம் - விழி பிதுங்கி நிற்கும் தவெக
Published on
Updated on
2 min read

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தொடர்பான வழக்கில், இன்று கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின் போது தவெக தரப்பில் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் மிகவும் மழுப்பலானதாக இருந்தன. குறிப்பாக, "சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் மக்கள் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம்" என்று தவெக தரப்பு வாதிட்டது, நீதிமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிபதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராகக் கடுமையான சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

நீதிமன்றத்தில் தவெக தரப்பின் வினோத வாதம்:

இந்த வழக்கில் உயிரிழப்பு மற்றும் நெரிசலுக்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே, கட்சியின் பொதுச் செயலாளர் பூசி ஆனந்த், தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்காக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரியுள்ளார்.

கரூர் நீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகளின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, அவர்கள் நெரிசலுக்குக் கட்சியைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து, அரசியல் பழிவாங்கல் மற்றும் வெளிநபர்கள் மீதும் பழி சுமத்தினர்.

தவெக தரப்பு முன்வைத்த வாதங்களின் சுருக்கம்:

அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கல்: இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காகத் தங்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுங்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினர்.

தாங்கள் பொதுக்கூட்டத்திற்கான விதிகளை முறையாகப் பின்பற்றினோம் என்றும், நெரிசலுக்குக் கட்சி நிர்வாகிகளின் கவனக்குறைவு காரணமல்ல என்றும் வாதிடப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் வரமாட்டார்கள் என்று தாங்கள் தவறுதலாகக் கணித்ததாகத் தவெக ஒப்புதல் அளித்தது. குறிப்பாக, "சனிக் கிழமை சம்பள நாள். அதனால் மக்கள் தங்களின் குடும்பச் செலவுகள் மற்றும் பிற வேலைகளில் கவனம் செலுத்துவார்கள். எனவே, கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று நாங்கள் கணக்கிட்டோம்" என்று தவெக தரப்பு மழுப்பலாக ஒரு விளக்கத்தை அளித்தது.

நீதிபதி பரத் குமாரின் சரமாரிக் கேள்விகள்:

இந்த மழுப்பலான வாதங்களைக் கேட்ட நீதித்துறை நடுவர் பரத் குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகத் திறமை மற்றும் தலைமை மீது கடும் கேள்விகளை எழுப்பினார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பெயரைக் குறிப்பிட்டு, நீதிபதி எழுப்பிய முக்கியமான கேள்விகள் வருமாறு:

"வேலுச்சாமிபுரம் இடம் போதுமானது என்று புஸ்ஸி ஆனந்த் கூறியது ஏன்?": பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரியபோது, வேலாயுதம்பாளையம் இடம் திருப்தியாக உள்ளது என்று புஸ்ஸி ஆனந்த் ஒப்புக்கொண்டார். அந்த இடம் போதுமானதாக இல்லை என்றால், அப்போதே 'வேண்டாம்' என ஏன் சொல்ல வேண்டியது தானே?

"விஜய்யின் கூட்டத்திற்கு ஏன் தவறான கணிப்பு?": அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமியின் கூட்டம் என்றால் அது கட்சிக்கூட்டம் மட்டுமே. ஆனால், விஜய்யைப் பார்க்கக் சினிமா ரசிகர்கள், அரசியல் ஆர்வலர் என அனைத்துத் தரப்பினரும் வருவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் கூடக் கண்டிப்பாக வருவார்கள். இப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தகுந்த மைதானம் போன்ற விசாலமான இடத்தை நீங்கள் ஏன் கோரவில்லை?

"10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று எப்படிச் சொன்னீர்கள்?": தமிழக அரசிடம் வெறும் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படித் தீர்மானமாகக் கூறினார்? எதை வைத்துக் கூட்டத்தின் எண்ணிக்கையைக் குறைவாகக் கணித்தீர்கள்? அதற்கானத் தரவுகள் உங்களிடம் உள்ளனவா?

"விஜய்க்குத் தெரியுமா?": மிக முக்கியமாகக், "அதிகக் கூட்டம் வரும் என்று விஜய்க்குத் தெரியுமா? தெரியாதா? இதைச் சொல்லுங்கள்!" என்று நீதிபதி நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

"விடுமுறை நாளில் ஏன் தவறான கணக்கு?": பொதுக்கூட்ட நாள் காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படித் தவறாகக் கணக்கிட்டீர்கள்?

காவல்துறையின் தரப்பு வாதம்:

இந்த வழக்கில் காவல்துறையின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், நெரிசலுக்கானப் பிரதான காரணங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன. காவல்துறை, "நடிகர் விஜய் குறித்த நேரத்தில் பொதுக்கூட்ட இடத்துக்கு வரவில்லை. கரூரில் தரப்பட்ட நேர அட்டவணையை அவர் கடைப்பிடிக்கவில்லை. கூட்டத்தை விரைவாக வந்து அடையும்படி காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தியும், போலீஸ் கூறியதை மீறி, அவர் ராங் ரூட்டில் (தவறான பாதையில்) சென்றார்" என்று குற்றம் சாட்டி உள்ளது.

நீதிமன்றத்தின் இந்தக் கடுமையானக் கேள்விகளும், தவெக தரப்பின் மழுப்பலான வாதங்களும், பொதுக்கூட்ட ஏற்பாட்டில் நிலவிய நிர்வாகக் குளறுபடிகளையும், தலைமையின் கவனக்குறைவையும் மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com