தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று முதல் முறையாக 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சலசலப்புகள் குறைந்த நிலையில் தற்போது, அமைச்சர் வினோத் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
விவசாயிகள் மற்றும் விவசாயம் ஆகியவை சந்தித்து வரும் சவாலினை பேசியபின்பு, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டினை அறிவித்தார். குறிப்பாக, வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தடையில்லாமல் நுகர்வோருக்கு காளான் கிடைக்கப்பெற கிராமப்புற இளைஞர்களுக்கு, பெண்களுக்கு 2026-2027ம் ஆண்டில் 50 சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடங்கள் 50 லட்சம் ரூபாய் நிதியில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். வேளாண் இயந்திரமாக்களை ஊக்குவிக்க வேளாண் கருவிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், சூரிய கூடார உலர்த்திகள் போன்றவை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
2026-2027ம் ஆண்டில் 227 கோடி 20 லட்ச ரூபாய் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் 24 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் 8 ஆயிரத்து 870 பவர் டில்லர்கள், 5,090 விசை களையெடுப்பான்கள், 1,400 சுழற் கலப்பைகள், 855 டிராக்டர்கள் வழங்கப்பட்டு வேளாண் இயந்திரமக்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். சூரிய கூடாரம் அமைக்க மானியமாக 3 லட்சத்து 50 ஆயிரமாக இருந்ததை உயர்த்தி 4 லட்சத்து 40 ஆயிரமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரமாக்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனியத்தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்திற்கு ரூ. 56.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினை சார்ந்த சிறு, குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படுமென்றும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள், 300 குழாய்கிணறுகளுக்கு 100% மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவ பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக, நவீன மருத்துவ பயன்பாடுகளில் இந்த பயிர்களின் தேவை அதிகரித்து வருவதால் அவற்றின் சாகுபடியை வணிக ரீதியாக ஊக்குவிக்கமுயல்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், புற்றுநோய் செல்களை எதிர்ப்பதில் திறன்மிக்கதாக கருதப்படும் முள் சீத்தா சாகுபடியையும் ஊக்குவிக்கும் விதமாக, 2026-2027ம் ஆண்டில் 1720 ஏக்கரில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.