மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் காரணமாக தமிழகம் மீண்டும் தேர்தல் களம் மூண்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
ஆனால், இதில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வெற்றி பின் ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர், தவெக சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இது தொகுதியில் மட்டுமின்றி கட்சிக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறி சமீபத்தில் தவெகவில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுத்துள்ளது, விஜய் ரசிகர் மன்ற மற்றும் தொண்டர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பலமுனை போட்டியாக மாறியுள்ள இந்த இரு தொகுதியிலும் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு சற்று சறுக்கும் என்றே சொல்லப்படுகிறது. காரணம் வேட்பாளர் என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இரு தொகுதியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வீடுகளுக்குச் சென்று பொதுமக்களை சந்திப்பது, அவர்களுடன் உணவருந்துவது, மக்களின் குறைகை கேட்பது, உள்ளிட்ட செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இரு வேட்பாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார். இருப்பினும் தொகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பினையே தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா, குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி பொதுமக்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக சத்தியபாமா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் “ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்?” என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து சத்தியபாமா தனது வாக்கு சேகரிப்பை தொடர்ந்து நடத்தாமல், பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறும் நிலைமையானது.
இதே போல் மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “பணத்திற்காக கட்சி மாறி சென்றுவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயம்” என்றும் “எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறு துரோகி துரோகி’’ என கோஷங்கள் எழுப்பினர். மேலும் கருப்புக்கொடி ஏந்தி பிரச்சாரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுச்செயலாளர், வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என நாளும் தொகுதி மக்களை சந்தித்த வண்ணம் இருக்கும் போதிலும் களத்தில் நிலை மோசமடைய தொடங்கியுள்ளது.
தற்போது இடைத்தேர்தலில் தவெகவின் ஒரே ‘பிரம்மாஸ்திரம்’ விஜய்யின் பிரசாரம் ஒன்றே என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 4 அன்று தாராபுரத்தில் ரோடு ஷோ செல்லவுள்ளார் விஜய். அங்கு அவர் கொடுக்கும் வாக்குறுதிகளும், தொகுதி குறித்த பிரச்சனைகளை பேசுவதும் இப்போது ஒரே வழியாக மாறியுள்ளது. குறிப்பாக அவர் வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் தவறு செய்துள்ளதாக கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவு தவெக மட்டுமே எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குத்திகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற எதிர்ப்பு நிலைப்பாடுகளும் மக்களிடையே எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பின் படி இடைத்தேர்தல் களம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு மிகவும் சவாலானதாகவும், கடுமையான போட்டி நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிகிறது. மேலும் குதிரைபேர விவகாரம், வாக்குறுதிகளில் தவெக அரசின் அணுகுமுறை மற்றும் சட்ட ஒழுங்கு குறிப்பிட்ட இடங்களில் விஜய் சரிவர கவனம் செலுத்தவில்லை என்பதே அதிருப்திக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த அதிருப்திகளை எல்லாம் விஜயின் பிரச்சாரம் சரி செய்யுமா என்பதில் தான் உள்ளது தவெக-வின் வெற்றி கனவு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்